×

இடைஞ்சலான மின் கம்பங்கள் மந்த கதியில் சாலை விரிவாக்கப்பணி: வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு

 

புழல், மே 19: புழல் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிக்கு இடைஞ்சலாக அமைந்துள்ள மின் கம்பங்களால், அப்பணியானது மந்த கதியில் நடைபெற்று வருவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். புழல் அம்பத்தூர் சாலை சந்திப்பில் இருந்து புழல் கேம்ப் அம்பேத்கர் சிலை, மத்திய சிறைச்சாலை, செக் போஸ்ட், காவாங்கரை வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செங்குன்றம் நோக்கி செல்லும் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால் புழல் சிறைச்சாலை, காவாங்கரை சிக்னல் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும் மற்றும் பொதுமக்களும் பல மணி நேரம் காத்திருந்து அவதிப்பட்டு சென்று வருகின்றனர்.

இதனையடுத்து, தேசிய நெடுஞ்சாலை துறையினர், சாலையை விரிவாக்கம் செய்து சுமார் ஒரு ஆண்டுக்கு மேலாகியும் இதுவரை பணிகள் முடிக்காமல் உள்ளதால், மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, சாலையை புதிதாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில், சாலையில் மின்சார கம்பங்கள் இடைஞ்சலாக இருப்பதால், சாலை பணிகள் விரைந்து முடிக்காமல் உள்ளது. சாலையில் இடைஞ்சலாக உள்ள மின் கம்பங்களை ஏன் அகற்றப்படவில்லை என சம்பந்தப்பட்ட புழல் மின்வாரியத்தில் கேட்டதற்கு, சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை துறையினர் மின்சார கம்பங்களை எங்கள் செலவிலே நாங்கள் அகற்றி விடுகிறோம் என தெரிவித்ததனால்,

அதனால் நாங்கள் நெடுஞ்சாலை துறையினருக்கு தடையாக உள்ள மின்சார கம்பங்களை அகற்றுவதற்கு அனுமதி வழங்கி பல மாதங்கள் ஆகியும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் சாலை மேம்படுத்தும் பணி மந்தக் கதியில் நடக்கிறது என தெரிவித்தனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில்; சென்னை புழல் பகுதியிலிருந்து செங்குன்றம் நோக்கிச் செல்லும் பகுதியில் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பல மணி நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. சாலையை அகலப்படுத்தும் வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை துறையினருக்கு கோரிக்கை வைத்தும், சாலையை விரிவாக்கம் செய்யும் பணியில் மந்தக் கதியில் நடைபெற்று வருகிறது.

இதற்கு முக்கியமான காரணம் சாலை விரிவாக்கம் பகுதியில் மின்சாரம் கம்பங்கள் இருப்பதனால் தான் காலதாமதம் ஆகிறது என தேசிய நெடுஞ்சாலை சார்பில் சாலையை அமைக்கும் பணி ஒப்பந்தம் எடுக்கப்பட்ட நபர்கள் கேட்டதற்கு தெரிவிக்கின்றனர். எனவே, சாலை விரிவாக்கம் பணியில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், உடனடியாக நடவடிக்கை எடுத்து துரிதமாக சாலையை அமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags : Puzhal ,Puzhal Chennai- ,Kolkata National Highway ,Puzhal Ambattur Road Junction ,Puzhal… ,
× RELATED ஆவடி மாநகராட்சி கூட்டத்தில்...