சென்னை: புதிய அரசு ஆட்சி நடத்த நாம் தொந்தரவாக இருக்கப் போவதில்லை. நடத்தட்டும். ஆனால், இயலாமையை மறைக்க நம் மேல் அவதூறுகள் கொண்டு தாக்கினால் விளக்கம் அளிப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தஞ்சைத் தரணியில் பூண்டி கலைவாணனின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன். பூண்டி கிருஷ்ணசாமி, பூண்டி கலைச்செல்வன் என கட்சிக்காகவே தம் வாழ்வை ஒப்படைத்துக் கொண்ட கழகக் குடும்ப விழா இது. சிறிய இடைவெளிக்குப் பிறகு, வெளியூர் வருகிறேன்.
நேற்று முன்தினம், திருச்சியில் இறங்கியது முதலே திமுக உடன்பிறப்புகளும் மக்களும் என்னைக் கண்டதும் வெளிப்படுத்திய உணர்வினை நான் புரிந்துகொண்டேன். உங்களை நானறிவேன். என்னை நீங்கள் அறிவீர்கள். நமக்குள் வார்த்தைகள் தேவையில்லை. ஒரு புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆட்சி நடத்த நாம் தொந்தரவாக இருக்கப் போவதில்லை. நடத்தட்டும். ஆனால், இயலாமையை மறைக்க நம் மேல் அவதூறுகள் கொண்டு தாக்கினால் விளக்கம் அளிப்போம். சமூக ஊடகங்களில் பொய்களைப் பரப்பினால் உண்மையைப் போட்டுடைப்போம் என உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன்.
* 13 வயது சிறுவன் கொலை மு.க.ஸ்டாலின் வேதனை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: கோவை இருகூர் அருகே 13 வயதே ஆன பள்ளிச் சிறுவன் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மனதைப் பதைபதைக்க வைக்கிறது. பெற்றோர்கள் நம் பிள்ளைகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் எனக் கண்காணித்து, அவர்களிடம் ஏற்படும் உளவியல் மாற்றங்களை அறிந்து, நாம்தான் நல்வழிப்படுத்த வேண்டும்.
பள்ளியில் மாணவர்களுடன் அதிக நேரம் செலவிடும் ஆசிரியப் பெருமக்களும் அவர்களிடம் கல்வியறிவோடு பொறுமையையும் அன்பையும் மனதில் விதைக்க வேண்டும் என்பதையே இந்த கொடிய நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது. நம் மாநிலத்தின் வருங்காலமே குழந்தைகள்தான். அவர்களைப் பொறுப்புடன் வளர்த்தெடுப்பது நம் அனைவரின் சமூகக் கடமை. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
