×

இலாகா ஒதுக்கப்பட்டத்தை தொடர்ந்து பணிகளை தொடங்கிய அமைச்சர்கள்: செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்தை இருக்கையில் அமர வைத்த விஜய்

 

சென்னை: தமிழகத்தில் புதிதாக பதவி ஏற்றுள்ள அமைச்சர்கள் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் அமைச்சர்கள் பதவியேற்று துறை சார்ந்த கோப்புகளில் கையெழுத்திட்டனர். தொடர்ந்து, அதிகாரிகளுடன் துறை ரீதியான அலுவல் பணிகளை தொடங்கினர். அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவிற்கு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர் முன்னாள் துணை முதல்வர் உதயநிதியின் அறையை கைப்பற்றியுள்ளார். அவருக்கு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிதியமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரை முதல்வர் விஜய் அமைச்சருக்கான இருக்கைகள் அமர வைத்தார். தொடர்ந்து, அவர்கள் கோப்புகளில் கையெழுத்திட்டு துறை ரீதியான துறை பணிகளை தொடங்கினர். சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற அருண்ராஜ், சுகாதாரத்துறை செயலாளர் தாரேஸ் அகமது உள்ளிட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் அருண்ராஜ் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சென்னையில் குதிரைகளுக்கு கிளாண்டர்ஸ் தொற்று பரவல் தொடர்பாகவும், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Tags : Vijay ,Sengottaiyan ,Pussy Anand ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,Chennai Secretariat ,
× RELATED திருமங்கலம் அருகே குண்டும், குழியுமான...