நெல்லை: நெல்லை தபால் நிலையத்திலிருந்து முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணிக்கு எடப்பாடி ஆதரவு அதிமுகவினர் நேற்று அல்வா மற்றும் உப்பு அனுப்பும் போராட்டம் நடத்தினர். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததோடு, எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. இதன் காரணமாக அதிமுகவில் கலககுரல்கள் எழத் தொடங்கியுள்ளன. அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், சி.வி.சண்முகம், எஸ்பி வேலுமணி இருவரையும் தலைமையாகக் கொண்ட ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது.
தொடர்ச்சியாக இரு குழுவினருமே மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகின்றனர். குறிப்பாக சி.வி.சண்முகம் இருக்கும் அணியினர் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசிற்கு ஆதரவு கொடுத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர், சி.வி.சண்முகம் குழுவினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவர்னர், சபாநாயகரிடம் தொடர்ச்சியாக மனு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நெல்லையைச் சார்ந்த அதிமுக நலன் விரும்பிகள் சிலர், நெல்லை பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையத்திலிருந்து எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் இருவரும் உணவில் அதிக அளவில் உப்பு சேர்த்து சாப்பிடும் வகையில் உப்பும், திருநெல்வேலி அல்வாவும் பார்சல் செய்து தபாலில் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் இருவரும் அவர்களை வளர்த்துவிட்ட அதிமுகவை அழிக்க பார்க்கின்றனர். அவர்கள் உண்ணும் உணவில் அதிக அளவில் உப்பு சேர்த்து சாப்பிட வேண்டும். எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு அல்வா கொடுக்க நினைத்த அவர்களுக்கு இன்று நாங்கள் திருநெல்வேலியில் இருந்து அல்வா மற்றும் உப்பு அனுப்புகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த திடீர் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
