×

உலகத்தை அளந்த உலகளந்த பெருமாளின் அருகில் அனுமன்!

பகுதி 2
மகாபலியை அனுகிரகம் செய்த திரிவிக்ரமர்,
“இரண்டு லோகமும் தனக்கு தானம் கொடுத்து விட்டாய். இனி நீ எங்கு இருப்பாய்?’’ என்று யோசித்த பகவான்,
“நீ கீழ் உலகத்திற்கு செல்வாயாக. அங்குள்ள அதலோகம், விதலோகம், சுதலோகம், தலாதலோகம், மஹாதலோகம், ரசாதலோகம், பாதாளலோகம் ஆகிய கீழுலகத்திற்கு நீயே மன்னராவாய்’’ என்று ஆசீர்வதித்தார். இப்படி மகாபலியின் கதை முடிவடைகிறது. இக்கதையினை இங்கே குறிப்பிட காரணம்; திரிவிக்ரமர் எப்படி தோன்றினார் என்பதற்காக!
சரி.. மீண்டும் கோயிலின் சிறப்புகளை பற்றி பார்ப்போம். கோயிலில் அதிகமான கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவைகளில் பல கல்வெட்டுக்கள் முக்கியமானவைகளாக பார்க்கப்படு கிறது. அதில், இரண்டாம் ராஜேந்திர சோழனின் 6வது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், திரிவிக்ரமர் வீற்றிருக்கும் மூலக்கருவறையை, முதலில் செங்கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. கால ஓட்டத்தில் அவை சிதிலமடையவே, மிலாடுடை நாட்டின் ஆளுநரான `ரணசேகரி ராமன்’ என்கின்ற `நரசிம்மவர்மன்’ என்னும் மன்னன், கோயிலின் மூலக்கரு வறையை முழுமையாக இடித்துவிட்டு, மூலக்கருவறையை முழுவதுமாக கருங்கற்களால் கட்டிப் புதுப்பித்திருக்கிறார் என்று இரண்டாம் ராசேந்திர சோழனின் கால கல்வெட்டு அறிதியிட்டு கூறுகிறது.
திருக்கோவிலூரில் வீற்றிருக்கும் திரிவிக்ரமகோயிலை, உலகளந்த பெருமாள் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு நீர்வளமும், நிலவளமுமிக்கது. அனுதினமும் வேதம் பாராயணம், வேள்விகள் ஆகியவை நடைபெறுவதால், திருமகள், நாமகள், துர்க்கை ஆகியோர் நித்யவாசம் (வசிப்பது) செய்கிறார்கள். அதேபோல், தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில், திருக்கோவிலூர் அமைந்துள்ளதால், நீர்வளம்மிக்க திவ்யதேசமாகும். அதன் காரணமாகச் செந்நெல் விளையும் வயல்கள் நிறைந்த அழகிய ஊர். இங்கு சுரபுன்னை, குரவம் பூக்கும் சோலையில் உள்ள வண்டின் ரீங்கார இசையினைக் கேட்டுக் கரும்புகள் செம்மையாக வளரும் வயல்கள் உள்ளன.
வைணவ உலகத்துக்கே திருக்கோவிலூர் திரிவிக்ரமர் கோயில் மிகவும் சிறந்து விளங்குகிறது. இக்கோயிலில்தான் ஆழ்வார்களால் `நாலாயிர திவ்ய பிரபந்தம்’ பாடப்பட்டு, உலகிற்கு சமர்ப்பிக்கப்பட்டது. இக்கோயிலில்தான் `திவ்யப் பிரபந்தம்’ முதன் முதலில் பாடப் பெற்றதால், இத்தலத்திற்கு `திவ்ய பிரபந்த அவதார ஸ்தலம்’ என்று சிறப்புப்பெயர் பெற்றது.
இக்கோயிலின் தலவிருட்சம் `புன்னை’ மரமாகும். இந்த மரம், வேணுகோபாலன் சந்நதிக்கு இடது பக்கத்தில் `ஏகாதசி மண்டபத்திற்கு’ எதிரில் உள்ளது.
கோயில் நான்கு எல்லையிலும், ஸ்ரீ ஆஞ்சநேயர் முதலான சந்நதிகள் இருக்கின்றன. திரிவிக்ரமஸ்வாமி கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். கிழக்கிலிருந்துதான் பெரும்பாலும் பக்தர்கள் வெளியே வருவார்கள். அப்படி வரும்போது பெரிய கோபுரத்தை அடைவார்கள். அங்கு ஸ்ரீ ஆஞ்சநேயர் சந்நதி உள்ளது. அவர் பெருமாளை பார்த்து, நின்ற திருக் கோலத்தில் சேவித்த வண்ணம் உள்ளார். மிகவும் வரபிரசாதியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆஞ்சநேயரை சேவித்துவிட்டு, அப்படியே வெளியே வந்தோமேயானால், பெரிய கோபுரம் நுழைவாயிலில் `முனியப்பன்’ உள்ளார். பெருமாளுக்கு காவல் தெய்வமாக கோபுரவாயிலின் வலப்பக்கத்தில் முனியப்பன் இருப்பதாக மரபு. அவருக்கு, பொங்கல் வைத்து பக்தர்கள் வழிப்பட்டு வருகிறார்கள்.
கோயிலின் எதிரில் உள்ள கருடஸ்தம்பத்தூணின் உச்சியில், கருடன் இருந்து பெருமாளை சேவித்த வண்ணம் இருக்கிறார். அந்த தூண் ஒரே கல்லால் ஆன 40 அடி உயரமுடையதாகும்.
கோபுரத்தின் இடதுப்பக்கத்தில், `ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் மடம்’ உள்ளது. கோயிலின் நிர்வாகத்தை இந்த மடத்தின் வழியில் வந்த ஜீயர்கள்தான் நிர்வகித்து வருகிறார்கள். சுமார் 1471 – ஆம் ஆண்டு காலத்தில், கோயில் மூலஸ்தானம் ஏதோ ஒரு காரணத்தால் அடைக்கப்பட்டு மறைக்கப்பட்டு இருந்தது. இப்படி இருக்க ஒரு நாள், திருமலையில் அப்போதைய ஜீயர் ஸ்வாமிகளின் கனவில் திருமலையப்பன் தோன்றி, திருக்கோவிலூர் திரிவிக்ரம கோயிலை புனருத்தாரணம் (புதுபிக்க) செய்ய ஆணையிட்டார். அதன்படி, ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள், திருமலையிலிருந்து திருக்கோவிலூருக்கு எழுந்தருளி, கோயிலை புதியதாக புதுபித்து, அன்று முதல் கோயில் நிர்வாகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.
கோயிலின் உள்ளே நுழைந்தவுடன், வலது பக்கத்தில் ஸ்ரீ வேணுகோபாலன் சந்நதி உள்ளது. இவர் க்ஷேத்திராதிபதியாக (கோயிலின் அதிபதி) முதன் முதலில் இருந்ததாகப் புராணம் கூறுகிறது. `பஞ்சகிருஷ்ணாரண்ய க்ஷேத்திரங்களில்’ ஒன்றாக சிறப்புப் பெற்றதால், இக்கோயிலில் சத்யபாமா, ருக்மணியுடன் வேணுகோபாலன் சாளக்கிராமத் திருமேனியுடன் சேவை சாதிக்கிறார். பிரம்மோற்சவம் காலத்தில், இங்கு பெருமாள் பத்து நாட்களும் எழுந்தருளி உற்சவ புறப்பாடு நடக்கும். மேலும், ரோகிணியில் ஸ்ரீ வேணுகோபாலனுக்கு திருமஞ்சனமும் புறப்பாடு சேவை மற்றும் சாற்றுமுறையும், ஆவணியில் வருட உற்சவமும் நடைபெறுகிறது. ஸ்ரீ வேணுகோபாலன் திருமேனி, கலை நுணுக்கத்துடன் எங்கும் பார்த்திராத வகையில், அற்புதமாக எழுந்தருயிருக்கிறார்.
சந்நதியின் இடது பக்கத்தில் மடைப்பள்ளி உள்ளது. இங்கு, `மடைப்பள்ளி நாச்சியார்’ என்னும் பெயரில் அம்மாள் எழுந்தருளியுள்ளார். பெருமாளுக்கு செய்யப்படும் பிரசாதங்கள் அனைத்தும் இவரது நேரடி பொறுப்பில் செய்யப்படுவதாக ஐதீகம். மடைப்பள்ளியிலிருந்து நேராக தாயார் சந்நதி உள்ளது. தாயார் சந்நதிக்கு போகும் வழியில் இடது புறத்தில் ஆழ்வார் சந்நதி அமைந்துள்ளது. இந்த சந்நதியில் `நம்மாழ்வார்’, `திருமங்கையாழ்வார்’, `குமுதவல்லி நாச்சியார்’, `தொண்டரடி பொடியாழ்வார்’, `குலசேகர ஆழ்வார்’, `திருப்பாணாழ்வார்’, `பெரியாழ்வார்’, `மதுரகவியாழ்வார்’, `திருமழிசையாழ்வார்’ என பெருமைமிக்க ஆழ்வார்கள் எழுந்தருளி உள்ளனர். இந்த சந்நதி முன்பு, `பவித்ரஉற்சவ’ மண்டபம் உள்ளது. இங்குதான் `பவித்ர உற்சவ’ ஹோமங்கள் நடைபெறும்.
தாயார் சந்நதிக்கு போகும் வழியில், குட்டி அனுமாரை சேவிக்க முடியும். தூணில் சிறிய வடிவத்தில் காணப்படுவதால், இவருக்கு `குட்டி அனுமார்’ என்று பெயர் வந்தது.
இந்த குட்டி அனுமார் சந்நதியிலிருந்து நேராக சென்றால், `தாயார் சந்நதிக்கு’ செல்லலாம். இந்தக் கோயிலில் தாயாருக்கு கருவறை, அந்தராளம், அர்த்த மண்டபம், மஹா மண்டபம், சோபன மண்டபம், திருக்கல்யாண மண்டபம் ஆகியவைகளுடன் மிகப் பெரிய சந்நதி யாக தாயார் சந்நதி அமைந்துள்ளது. தாயார் மூலவரின் திருநாமம் `பூங்கோவல் நாச்சியார்’ ஆகும். தாயார் உற்சவரின் பெயர் `புஷ்பவல்லி தாயார்’ ஆகும். முதலாழ்வார்களும், திருமங்கையாழ்வாரும் `மங்களாசாசனம்’ செய்துள்ளார்கள்.
தாயார் சந்நதிக்கு வலப்பக்கத்தில், `சக்கரத்தாழ்வார் சந்நதி’ உள்ளது. சக்கரத்தாழ்வார், 16 திருக்கரங்கள் கொண்டு காட்சியளிக்கிறார். யோக யந்திரங்கள் நடுவில் மூன்று புறமும் `அக்னி ஜுவாலையுடன்’ சக்கரத்தாழ்வார் அமைந்துள்ளார். சக்கரத்தாழ்வாரின் பின்புறம் `யோக நரசிம்மர்’ நான்கு திருக்கரங்களோடும், சக்கரத்துடனும், காட்சியளிக்கிறார். மனநோய் உள்ளவர்கள், தீராத நோய், குடும்ப கஷ்டம் உடையவர்கள் சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாரையும், நரசிம்மரையும் வழிபாடு செய்து நெய் விளக்கேற்றி, சுதர்சன சதகம் வாசித்தால் பிரச்னைகள் விலகும். மேலும், ராமர் சந்நதி, வரதராஜர் சந்நதி, பிள்ளைலோகாச்சாரியார், லட்சுமி நாராயணர், லட்சுமிவராகர், லட்சுமி நரசிம்மர், ஆண்டாள், உடையவர், ஸ்ரீ மணவாளமாமுனிகள், ஸ்ரீ விஷ்ணுதுர்க்கை ஆகிய சந்நதிகளும் இருப்பது பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது.

Tags : Anuman ,Trivikramar ,Mahabali ,
× RELATED இந்த வார விசேஷங்கள்