ஜெய்ப்பூர்: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் முறைகேடாகத் தேர்ச்சி பெற்றது குறித்து சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிவால் குடும்பத்தினர் கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தனர். அதில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளும் ஒரே நேரத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளதாகப் பதிவிட்டிருந்தனர். இதில் கன்ஜன் என்ற மாணவி 10ம் வகுப்பில் 86 சதவீதம் எடுத்த நிலையில், நீட் தேர்வில் 92.53 சதவீத மதிப்பெண் பெற்று வாரணாசி அரசு மருத்துவக் கல்லூரியிலும், சானியா 10ம் வகுப்பில் 63 சதவீதம் எடுத்த நிலையில் 94.07 சதவீத மதிப்பெண் பெற்று மும்பையிலும் சேர்ந்தனர். இதேபோல் பாலக் 98.61 சதவீதமும், பிரகதி 89 சதவீதமும், விகாஸ் பிவால் 86 சதவீத மதிப்பெண்களும் பெற்று பல்வேறு அரசு கல்லூரிகளில் இடம் பிடித்தனர். இவர்கள் அனைவரும் பள்ளியில் சராசரி மதிப்பெண் மட்டுமே பெற்ற நிலையில், நீட் தேர்வில் மட்டும் அசாதாரண வெற்றி பெற்றது அப்போது சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை.
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த குடும்பத்தைச் சேர்ந்த தினேஷ், மாங்கிலால் பிவால் மற்றும் மாணவர் விகாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். சவாய் மாதோபூர் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த விகாஸ், கடந்த ஜனவரி முதல் வகுப்புகளுக்கு ஒழுங்காக வரவில்லை என்றும், கல்லூரியில் நடந்த தேர்வுகளில் வெறும் 30 சதவீதம் மட்டுமே மதிப்பெண் எடுத்துள்ளதாகவும் கல்லூரி முதல்வர் பி.பி.மீனா தெரிவித்துள்ளார். விகாஸின் கல்வித்திறன் குறித்து அவர் கூறுகையில், ‘அவர் மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே கல்லூரிக்கு வந்தார். அவரது செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்’ என்றார். இதனிடையே தனது பெரியப்பா தினேஷ் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்ததும், ஜெய்ப்பூர் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த பாலக் என்ற மாணவி விடுதியிலிருந்து திடீரென தலைமறைவாகிவிட்டார். இந்த மோசடியில் தினேஷ் மற்றும் மாங்கிலால் ஆகியோர் வினாத்தாளை சட்டவிரோதமாக விலைக்கு வாங்கி தங்கள் குடும்ப பிள்ளைகளுக்கு வழங்கியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டு நடந்த தேர்விலும் ரிஷி பிவால் மற்றும் அமன் ஆகிய இரண்டு மாணவர்களை இதே பாணியில் தேர்ச்சி பெற வைக்க அவர்கள் வியூகம் வகுத்துள்ளனர். இதில் ரிஷி 10ம் வகுப்பில் 43.67 சதவீதமும், 12ம் வகுப்பில் 50 சதவீதமும் மட்டுமே எடுத்துள்ளார். சிகார் பகுதியில் உள்ள சில பயிற்சி மையங்கள் இந்த மாணவர்களின் போலி வெற்றியை விளம்பரமாகப் பயன்படுத்தியது குறித்தும் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கல்வித்திறன் குறைவாக இருந்தும் முறைகேடாக அதிக மதிப்பெண் பெற்றது குறித்து விசாரணை தீவிரமடைந்துள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள சானியா மற்றும் கன்ஜன் ஆகியோரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நீட் வினாத்தாள் கசிவு வழக்கு ஒருபக்கம் நடக்கும் நிலையில், முந்தைய ஆண்டுகளில் நடந்த தேர்வில் முறைகேடு விவகாரமும் சூடுபிடித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரூ.10 லட்சம் கொடுத்து வாங்கியும் 107 மதிப்பெண் மட்டுமே பெற்ற மகன்;
நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தினேஷ் பிவால், மாங்கிலால் பிவால் மற்றும் அவரது மகன் விகாஸ் பிவால் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்கள் நீட் வினாத்தாளைப் போன்றே இருக்கும் ஒரு வினாத்தாளைப் பெற்று, அதனைப் பயிற்சி மையங்களுக்கு விநியோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சீகர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு இதற்கான ஒருங்கிணைப்பு மையமாகச் செயல்பட்டதும், அங்கிருந்து சுமார் 150 மாணவர்களுக்கு வினாத்தாள் கசிந்திருக்கலாம் என்பதும் ஏற்கனவே நடந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது நடந்து வரும் விசாரணையில், கைதான தினேஷ் பிவால் தனது மகன் ரிஷி பிவால் என்பவருக்காக 10 லட்சம் ரூபாய் கொடுத்து வினாத்தாளை வாங்கியதாகத் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. வினாத்தாள் முன்கூட்டியே கிடைத்த போதிலும், ரிஷி பிவால் 720 மதிப்பெண்களுக்கு வெறும் 107 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துத் தேர்வில் தோல்வியடைந்துள்ளார். தலைமறைவாக உள்ள இவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விசாரணையின் போது தினேஷ் பிவால், ‘எனது மகன் ரிஷிக்காகவே நான் வினாத்தாளை விலைக்கு வாங்கினேன்’ என்று ஒப்புக்கொண்டுள்ளார். ரிஷி பிவால் தனது பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 44 சதவீத மதிப்பெண்களும், 2026ம் ஆண்டு நடந்த பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 50.80 சதவீத மதிப்பெண்களும் மட்டுமே பெற்றுள்ளார். இதில் இந்தி பாடத்தில் 32, ஆங்கிலத்தில் 51, இயற்பியலில் 51, வேதியியலில் 58 மற்றும் உயிரியலில் 62 மதிப்பெண்களை எடுத்த அவர், கூடுதல் கருணை மதிப்பெண்கள் உதவியுடன் தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
