புதுடெல்லி: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: ஜூலை 1 முதல் தொடங்கும் கல்வியாண்டில், 9ஆம் வகுப்பு மாணவர்கள் குறைந்தது இரண்டு இந்திய மொழிகள் உட்பட மூன்று மொழிகளைப் படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு வெளிநாட்டு மொழியைத் தேர்வுசெய்ய விரும்பும் மாணவர்கள், இரண்டு இந்திய மொழிகளைப் படித்த பிறகு அதனை மூன்றாவது மொழியாகவோ, அல்லது கூடுதலாக நான்காவது மொழியாகவோ மட்டுமே தேர்வுசெய்ய முடியும்.
கற்றலின் மீது கவனத்தைச் செலுத்துவதற்கும், மாணவர்கள் மீது தேவையற்ற அழுத்தத்தைக் குறைப்பதற்கும், 10ஆம் வகுப்பு நிலையில் மூன்றாவது மொழிக்கான அரசு தேர்வுகள் எதுவும் நடத்தப்படாது. 3வது மொழிக்கான அனைத்து மதிப்பீடுகளும் முழுமையாகப் பள்ளி சார்ந்ததாகவும், அகமதிப்பீடுகளாகவும் இருக்கும். மூன்றாவது மொழியில் மாணவர்களின் செயல்திறன், சிபிஎஸ்இ சான்றிதழில் முறையாகப் பதிவு செய்யப்படும்.
மூன்றாவது மொழி சார்ந்த காரணங்களுக்காக, எந்தவொரு மாணவரும் 10ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை எழுதுவதிலிருந்து தடுக்கப்பட மாட்டார்கள் என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. மாதிரி வினாத்தாள்கள் மற்றும் அகமதிப்பீட்டிற்கான மதிப்பீட்டு விதிமுறைகள் ஆகியவை வாரியத்தால் விரைவில் வெளியிடப்படும். எனவே 6 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கான மூன்றாவது மொழிப் பாடத் தேர்வுகளை ஜூன் 30 க்குள் ஓயாசிஸ்(‘OASIS’) இணையதளத்தில் பள்ளிகள் புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
