×

சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கள ஆய்வு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம்: யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது என அறிவுரை

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கள ஆய்வு குழுவுடன் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது என்று மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது. இக்குகுழு வருகிற 18ம் தேதி (நாளை) முதல் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.

அந்த குழு மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்களை நேரடியாக சந்தித்து அவர்களது கருத்துகளையும், பரிந்துரைகளையும் பெற்று கள ஆய்வில் ஈடுபட உள்ளது. அதன் பிறகு அதனை அறிக்கையாக தயாரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று திமுக உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட 36 பேர் கொண்ட குழுவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார்.

இதில் திமுக துணை பொதுச்செயலாளர்கள் கனிமொழி, பொன்முடி, ஆ.ராசா, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட திமுக முன்னணியினர் கலந்து கொண்டனர். ஆலோசனையின் போது எவ்வாறு கள ஆய்வு நடத்த வேண்டும். கள ஆய்வுக்கான நடைமுறைகள் குறித்தும் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட குழுவினரை நியமித்திருந்தேன். அவர்களுடனான சந்திப்பில் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் தலைமைக் கழகத்தின் பிரதிநிதிகளாக, எனது சார்பில் அனுப்பி வைக்கப்படுபவர்கள். எனது காதுகளாகச் செல்பவர்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை.

நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது. இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும். ஒருவர் மட்டும் தனியாகச் சந்திக்க கூடாது. திமுகவினரை மனதுவிட்டுப் பேச அனுமதியுங்கள். அவர்களின் குறைகளை, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை அவர்கள் கொட்டித் தீர்க்கட்டும். தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள்.

நிர்வாகிகளின் உணர்வு என்ன? அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அதுமட்டும்தான் எனக்கு தேவை. டாக்டரிடம் பொய் சொல்லக் கூடாது என்பார்கள். இப்போது நானும் அந்த இடத்தில்தான் இருக்கிறேன். என்னிடம் எதையும் மறைக்காதீர்கள். நோய் என்னவென்று தெளிவாகத் தெரிந்தால் தான் அதற்கு மருந்து கொடுக்க முடியும். கட்சியினர் உங்களிடம் சொல்லும் தகவல்களை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபர்களிடம் சொல்லக் கூடாது. அப்படி செய்தால் இந்த ஆய்வின் நோக்கமே வீணாகி விடும்.

பிரச்னைகளைச் சரிசெய்து, நம்மை மாற்றிக் கொண்டால்தான் அடுத்த 100 ஆண்டுகளுக்கு உயிர்ப்போடு இயங்க முடியும். நீங்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில்தான் கழகத்தில் மாற்றங்கள், சீர்திருத்தங்களைச் செய்யப் போகிறேன். அதனால் ஸ்கேன் ரிப்போர்ட் போல துல்லியமாக இது இருக்க வேண்டும். ஜூன் 5க்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இதன் மீதான நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும். உடன்பிறப்புகளின் உண்மையான உணர்வினை அறிந்து வந்து சொல்லுங்கள். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : M.P. K. Stalin ,Chennai ,Tamil Nadu Assembly ,Tamil Nadu Assembly elections ,K. Stalin ,
× RELATED குமரி அரசு மருத்துவக்கல்லூரியில்...