×

திருவொற்றியூரில் சாலையோர குப்பையில் தீ: மக்களுக்கு கண் எரிச்சல்: அதிகாரிகள் அலட்சியம்

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புகளில் வெளியேற்றப்படும் குப்பையை சென்னை மாநகராட்சி என்விரோ என்ற தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் சேகரித்து அவற்றை தரம்பிரித்து மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத குப்பை கொடுங்கையூரில் உள்ள சென்னை மாநகராட்சி பிரதான குப்பை மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்கள், குப்பையை தங்களது வாகனத்தில் ஏற்றி கும்மிடிப்பூண்டியில் செயல்படும் தனியார் குப்பை மையத்தில் ஒப்படைக்கவேண்டும்.

தனியார் நிறுவனத்தின் குப்பையை கும்மிடிப்பூண்டி எடுத்து செல்ல அதிக செலவாகும் என்பதால் ஒரு சிலர் தங்களது குப்பையை இரவு நேரத்தில் சாலை ஓரத்தில் கொட்டுகின்றனர். ஒரு சிலர் எரிக்கின்றனர். இதனால் சாலை முழுவதும் புகைமண்டலம் உருவாகி வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், சுவாச கோளாறு ஏற்படுகிறது. இதுபோல் திருவொற்றியூர் பேசின் சாலை கரிமேடு தெரு அருகே சாலையோரம் குப்பை கொட்டப்பட்டிருந்தது. நேற்று நள்ளிரவு குப்பையில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் புகை மூட்டம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் திருவொற்றியூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். குப்பை கொட்டியது யார், தீ பற்ற வைத்தது யார் என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ”பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை மற்றும் திடக்கழிவு கொட்டப்படுவதை கண் காணிக்க சென்னை மாநகராட்சியில் என்போர்ஸ் டீம் செயல்பட்டு வருகிறது. இவர்கள் இரவு நேரத்தில் குப்பை கொட்டுவதை கண்காணித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது அபராதம் விதிப்பார்கள். தற்போது என்போர்ஸ் டீம் முறையாக கண்காணிப்பை மேற்கொள்வதில்லை. மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் இதை கவனத்தில் கொள்வதில்லை. இதனால் தனியார் நிறுவனத்தினர் குப்பையை இரவு நேரத்தில் சாலையோரம் காலியாக உள்ள இடங்களில் கொட்டி தீவைப்பதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். சட்டவிரோத குப்பை திடக்கழிவு புகார் பிரிவான சென்னை மாநகராட்சியின் 1913க்கு வரும் புகார் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.

Tags : Thiruvotriyur ,Chennai Corporation ,Chennai Corporation Enviro ,Kodungaiyur… ,
× RELATED பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முதலமைச்சர் விஜய் கண்டனம்