- டாஸ்மாக்
- டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பார் கட்டிட உரிமையாளர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்
- ஜனாதிபதி
- அன்பராசன்
சென்னை: தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம், பார் கட்டிட உரிமையாளர்கள் தொழிலாளர்கள் நல சங்க தலைவர் அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் அமைப்பதற்காக நிர்வாகம் எந்தவித முதலீட்டு செலவுகளையும் மேற்கொள்ளவில்லை. கடைகள் அமைப்பதற்கான இடங்களை, பார் உரிமையாளர்களாகிய நாங்களே எங்கள் சொந்த செலவில் தேர்வு செய்து, அதிகாரிகள் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு மதுப்பான கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் கடைகளை அமைப்பதற்காக கட்டிடம், உள்கட்டமைப்பு, மின் வசதி, பராமரிப்பு மற்றும் இதர தேவைகளுக்காக கோடிக்கணக்கான தொகைகள் செலவிடப்பட்டுள்ளன. ஆனால், நாங்கள் டாஸ்மாக் கடை மற்றும் பார் நடத்துவதன் மூலம், எங்கள் சொந்த முதலீட்டில் மதுபானக் கடைகளையும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களையும் நடத்தி வருகிறோம். இந்நிலையில் அரசு திடீரென 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடுவதால், அந்த கடைகளை நம்பி வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர், மற்றும் கடை நடத்தும் எங்களது குடும்பங்களும் மிகுந்த வாழ்வாதார பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோம். இவ்வளவு குறுகிய காலத்தில் (இரண்டு வாரங்கள்) கடையை மூடுவது என்பது இயற்கை நீதிக்கு எதிரானது.
கட்டுமான பணிகளுக்காகவும், உரிமத்திற்காகவும் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. முறையான கால அவகாசம் இன்றி மூடப்படுவது கட்டிட உரிமையாளர்களையும், உரிமம் பெற்றவர்களையும் பெரும் கடனாளியாக்கும். எனவே, உடனடியாக கடைகளை மூடும் நடவடிக்கையை கைவிட்டு, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, எங்களது தரப்பு நியாயங்களை முறையிடவும், மாற்று இடத்திற்கு செல்லவும் தகுந்த கால அவகாசம் வழங்கி உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
