×

வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வு ஜூன் 21ம் தேதி மீண்டும் நடைபெறும்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

 

டெல்லி: NEET UG 2026 மறுதேர்வை ஜூன் 21, 2026அன்று நடத்த தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வினாத்தாள் கசிவு புகாரைத் தொடர்ந்து, மே 3, 2026 அன்று நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் (NEET), இந்தியாவின் மிக முக்கியமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்தத் தேர்வு, சமீபத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளாகி ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த மே 3 ஆம் தேதி இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்து மாணவர்கள் முடிவுகளுக்காகக் காத்திருந்த நிலையில், தேசிய தேர்வு முகமை (NTA) அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, மே 3 அன்று நடத்தப்பட்ட நீட் தேர்வு செல்லாது என்றும், அது முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது

இந்தத் தேர்வு ரத்து செய்யப்படுவதற்கு முதன்மையான காரணமாகக் கூறப்படுவது ‘வினாத்தாள் கசிவு’ (Question Paper Leak). ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்வு தொடங்குவதற்கு முன்னரே வினாத்தாள் சமூக வலைதளங்களிலும், சில குறிப்பிட்ட நபர்களிடமும் கசிந்ததாகப் புகார்கள் எழுந்தன. தொடக்கத்தில் இதனை மறுத்த நிர்வாகம், பின்னர் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் வினாத்தாள் கசிந்தது உண்மைதான் என்பதை உறுதி செய்தது. தேர்வின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானதால், இந்தத் தேர்வை ரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு தேசிய தேர்வு முகமை வந்தது.

தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மறுதேர்வு (Re-exam) குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மறுதேர்வுக்கான தேதி மற்றும் அதற்கான வழிமுறைகள் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு மீண்டும் ஏற்படாத வண்ணம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் புதிய தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

புதிய தேர்வுத் தேதி மற்றும் தேர்வு மையங்களுடன் கூடிய புதிய ஹால் டிக்கெட்டுகள் (Admit Card) விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும். மாணவர்கள் மறுதேர்வுக்கு மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. முந்தைய பதிவு விவரங்களே பயன்படுத்தப்படும். தேர்வர்கள் மற்றும் பெற்றோர்கள் NTA-வின் அதிகாரப்பூர்வ வழிமுறைகளை மட்டுமே நம்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

Tags : National Selection Agency ,Delhi ,
× RELATED வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து...