×

விஜய்க்கு ராமதாஸ் பாராட்டு; கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு?: புலம்பும் ராமதாஸ் ஆதரவாளர்கள்

திண்டிவனம்: தமிழக முதல்வர் விஜய்க்கு, ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு? என அவரது ஆதரவாளர்கள் புலம்பி வருகின்றனர். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சசிகலாவின் அஇபுமமுகவுடன் பாமக கூட்டணி அமைத்து பல இடங்களில் போட்டியிட்டது. இதில் 2 கட்சிகளும் டெபாசிட் இழந்தது. இதையடுத்து தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து தைலாபுரத்துக்கு தனது ஆதரவு வேட்பாளர்களை வரவழைத்து ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பாகவும் கட்சி நிர்வாகிகளிடம் விவாதித்தார். அப்போது பெரும்பாலானோர், தேர்தலுக்கு முன்பே தாங்கள் தெரிவித்த கருத்துக்கள் ஏற்கப்படாதது குறித்து தங்களது மனக்குமுறலை நிறுவனரிடம் கொட்டி தீர்த்ததாக தகவல் வெளியாகின.

இதனிடையே முதல்வராக பதவியேற்ற விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் மரியாதை நிமித்தமாக அவர்களின் இல்லத்திற்கே சென்று சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். அந்த வரிசையில் பாமக தலைவர் அன்புமணியையும், சென்னையிலுள்ள அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார். ஆனால் பாமக நிறுவனர் ராமதாசை, விஜய் சந்திக்கவில்லை. இதற்கான வாய்ப்புகளும் மிகமிக குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தமிழகத்தில் மேலும் 717 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், முதல்வருக்கு ராமதாஸ் பாராட்டு தெரிவித்தார். இதுஒரு நல்ல தொடக்கத்திற்கான அடையாளமாக கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தவெகவுடன் தேர்தலுக்கு முன்பே கூட்டணி வைக்க வேண்டுமென சிலர் தொடர்ந்து வலியுறுத்திய நிலையில், தற்போது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்? என ராமதாஸ் ஆதரவாளர்கள் புலம்பி வருகின்றனர். மேலும் சட்டசபைக்குள் தங்களது அணியிலிருந்து ஒரு எம்எல்ஏகூட செல்லாத நிலையில், கட்சியை மீட்டெடுப்பதிலும் கூடுதல் சிரமம்தான் என குமுறி வருவதால் அக்கட்சி வட்டாரத்தில் சலசலப்பு நீடிப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன.

Tags : RAMADAS ,VIJAY ,Dindivanam ,Tamil Nadu ,Chief Minister ,Ramadhas ,Pamaka ,Aibumamuka ,Sasikala ,
× RELATED தவெக ஆட்சியில் காட்சி காட்சியாக...