×

கரூரில் பெண் கழுத்தறுத்து கொலை திருவாரூரில் பெண் எரித்துக் கொலை: தூத்துக்குடி, தென்காசியில் 2 வாலிபர்கள் படுகொலை

சென்னை: கரூர் அருகே கரும்புக்காட்டில் பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல முத்துப்பேட்டை அருகே 45 வயது பெண் எரித்து கொலை செய்யப்பட்டு உள்ளார். இதேபோல், தூத்துக்குடி, தென்காசியில் 2 வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தெற்கு மேலப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ். திருச்சியில் தங்கி பழக்கடை ஒன்றில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சிவரஞ்சனி (40). இவர்களது மகன் விகாஷ் (23). பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இருவரும், வெளியூரில் வேலை பார்த்து வருவதால் சிவரஞ்சனி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை 8 மணியாகியும் சிவரஞ்சனியின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டில் சிவரஞ்சனி இல்லை. உடனே உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து உறவினர்கள் அவரை தேடியபோது வீட்டிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள கரும்பு காட்டில் சிவரஞ்சனி கழுத்தறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது.

தகவலறிந்த டிஐஜி சிபி சக்கரவர்த்தி, எஸ்பி ஹரிகிரண் பிரசாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய் குறிஞ்சி, கொலை நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வயல் வழியாக சென்று அய்யர்மலை வலையபட்டி சாலையில் உள்ள குடிநீர்குழாய் அருகே படுத்துக்கொண்டது. இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அதில் கொலையாளி விட்டு சென்ற கைகடிகாரம் ஒன்று சிக்கி உள்ளது. அதை கைப்பற்றிய போலீசார், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து கொலையாளி யார்? சிவரஞ்சனி நகைக்காக ெகாலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் ஊராட்சி தர்காசு கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் எலி பிடிப்பதற்காக அதே பகுதியில் உள்ள வயல்வெளிக்கு நேற்றுமுன்தினம் சென்றனர். அப்போது வரப்பு கரையில் எரிந்த நிலையில் தலை மற்றும் கால்கள் எலும்பு கூடாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த முத்துப்பேட்டை ஏஎஸ்பி நீல் ஷர்மா தலைமையில் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தியதில், எரித்து கொலை செய்யப்பட்டது 45 வயது மதிக்கத்தக்க பெண் என்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் போலீசார், பெண்ணின் உடலின் பாகங்களை மீட்டு தடயவியல் ஆய்வுக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர், எதற்காக எரித்து கொலை செய்யப்பட்டார் என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி, முல்லை நகர் பகுதியில் சிஎஸ்ஐ கல்லறை தோட்டம் உள்ளது. இங்கு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடப்பதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரூரல் டிஎஸ்பி சுதிர் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இறந்து கிடந்த வாலிபரின் கழுத்து மற்றும் தாடைப்பகுதியில் வெட்டுக் காயங்கள் இருந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தது உறுதியானது. விசாரணையில் அவர், தூத்துக்குடி தாளமுத்துநகர் சக்தி விநாயகர்புரத்தைச் சேர்ந்த பூலப்பன் மகன் அந்தோணி ஜேசுராஜ் (27) என்பதும், கட்டிட தொழிலாளி என்றும் தெரிய வந்தது. இவரது மனைவி ரோகிணி பிரியா (28). இவர்களுக்கு 4 வயது மகன் உள்ளான். அந்தோணி ஜேசுராஜிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து ரோகிணி பிரியாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதை அவரது சகோதரர்கள் அருண்குமார் (22), செல்வக்குமார் (21) ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோகிணி பிரியா தாய் வீட்டுக்கு சென்றிருந்தார். அங்கும் சென்ற அந்தோணி ஜேசுராஜ், மனைவியை தாக்கி உள்ளார். இதனை தடுக்க வந்த மாமியார் பூர்ணம்மாளையும் தாக்கி உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மைத்துனர்கள் அருண்குமார், செல்வக்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ஜேசுராஜை நண்பர்கள் இருவருடன் சேர்ந்து முல்லைநகரில் உள்ள சிஎஸ்ஐ கல்லறை தோட்டத்திற்கு மது குடிக்க அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து போதை ஏறியதும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியது தெரிய வந்தது. இதையடுத்து அருண்குமார்(23), அவரது நண்பர் சுதாகர்(23) ஆகிய இருவரையும் தனிப்படையினர் கைது செய்தனர். தலைமறைவான செல்வக்குமார் மற்றும் நண்பர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆலங்குளம்: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அருணாசலபுரம் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (32). கூலித்தொழிலாளி. இவரது மனைவி இசக்கியம்மாள் (27). இஜிதா (11), அசுவதா (9) என்ற 2 மகள்களும், மதுசூதன் (8) என்ற மகனும் உள்ளனர். நகை பிரச்னை தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் அந்த கிராமத்தின் மெயின் ரோட்டில் உள்ள சர்ச் அருகில் மணிகண்டன் நடந்து வந்தபோது 5க்கும் மேற்பட்ட கும்பல் அவரை சூழ்ந்து கம்பால் சரமாரியாக தாக்கியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிந்து மணிகண்டனின் மனைவி இசக்கியம்மாள் மற்றும் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் ஒரே நாளில் 5 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில், நேற்று 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Karur ,Thiruvaroor ,Tutickudi, Tenkasy ,Chennai ,Karumbukat ,Muthuppet ,Tuticorin, Tenkasy ,
× RELATED வீட்டுக்குள் புகுந்து மாணவிக்கு தவெக...