சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு எதிராகவே அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும். மீறினால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக வெற்றிபெற்றபோதிலும், மெஜாரிட்டி கிடைக்காததால், தவெக தலைவர் விஜய் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். தமிழக முதல்வராக கடந்த 10ம் தேதி விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். ஆளுநர் உத்தரவுப்படி அவர் இன்று தனது ஆட்சிக்கான பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்கிறார்.
திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடிக்க விஜய், அதிமுகவில் குழப்பத்தை உருவாக்கி, அதில் ஒரு பிரிவினருக்கு ஆட்சியில் பங்கு தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி தனது அணிக்கு ஆதரவாக மாற்றியுள்ளார். இதனால் அதிமுகவில் வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரது தலைமையில் புதிய அணி உருவாகியுள்ளது. இந்த அணிக்கு 28 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி அணிக்கு 19 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவை குழுத் தலைவர் தேர்வை மையமாகக் கொண்டு உள்கட்சிப் பிரச்னை வெடித்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்ற நிலையில், இன்னமும் அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதது கட்சிக்குள் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபுறம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி செயல்பட்டு வரும் நிலையில், மறுபுறம் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆதரவு அணியும் தனித்த அரசியல் நிலைப்பாட்டில் செயல்பட்டு வருவது, அதிமுகவில் மீண்டும் பிளவை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததும் தலைமை செயலகத்தில் அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட அறையில் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். சுமார் ஒரு மணி நேரம் நடந்த ஆலோசனையில், இதுவரை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்ததாக கூறப்பட்ட 19 எம்எல்ஏக்களில் 10 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது கட்சிக்குள் ஆதரவு பலம் குறைந்து வருகிறதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, ‘அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியே தொடர வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தியுள்ள நிலையில், ‘முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை அந்த பதவிக்கு நியமிக்க வேண்டும்’ என மற்றொரு தரப்பினர் சட்டப்பேரவை சபாநாயகரிடம் தனியாக மனு அளித்துள்ளனர். அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர் சபாநாயகர் அறையில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், முதல்வராக பொறுப்பேற்ற பின் விஜய் பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். அதன்படி திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை நேற்று முன்தினம் சந்தித்தார். இதையடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோரை முதல்வர் விஜய் நேற்று சந்தித்தார். அவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மட்டும் சந்திக்கவில்லை. ஆனால், அதிமுகவில் போர்க்கொடி தூக்கியுள்ள அணியைச் சேர்ந்த சி.வி.சண்முகத்தின் எம்ஆர்சி நகரில் உள்ள வீட்டுக்கு விஜய் நேற்று பிற்பகல் சென்றார்.
அப்போது முதல்வர் விஜய் அங்கிருந்த எஸ்.பி.வேலுமணி, சி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், லீமாரோஸ் உள்ளிட்ட 28 அதிமுக எம்எல்எக்களுக்கும் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். உண்மையில், முதல்வர் விஜய் தமிழகத்தில் சிறப்பான, விருப்பு வெறுப்பு இல்லாத ஒரு ஆட்சியை கொடுக்க விரும்பினால் அதிமுக பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்று சந்தித்து இருக்க வேண்டும். ஆனால், அவரை புறக்கணித்து விட்டு அதிமுக அதிருப்தி அணியை சந்தித்தது, கட்சிக்குள் பிளவை விஜய் ஊக்குவிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘விஜய் முதல்வராக பதவியேற்று 3 நாள் தான் ஆகிறது. அதற்குள் தமிழகத்தின் ஒரு பெரிய கட்சியான அதிமுகவை 2 ஆக உடைத்து விட்டதாக நாங்கள் கருதுகிறோம். தவெக கட்சிக்கு தற்போது 106 எம்எல்ஏக்கள் ஆதரவுதான் உள்ளன. இன்று அவர் சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்க 118 எம்எல்ஏக்கள் ஆதரவு வேண்டும். திமுக கூட்டணியை கடுமையாக விமர்சனம் செய்தவர், மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் திமுக அணியில் இருந்து வெற்றிபெற்ற 13 எம்எல்ஏக்கள் ஆதரவை பெற்றுள்ளார். இப்போது, அதிமுகவையும் உடைத்து, எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு அணியை விஜய் உருவாக்கியுள்ளார். அவர்களையும் விஜய் அமைச்சரவையில் சேர்ப்பதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 28 அதிமுக எம்எல்ஏக்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளனர். இதன்மூலம் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அரசு வெற்றிபெறுவது நிச்சயம்.
ஆனால், இதுவரை ஒரு முதல்வரே இவ்வளவு பகிரங்கமாக இறங்கி வந்து, இதுபோன்ற கட்சி பிளவை ஊக்கப்படுத்தியது கிடையாது. மறைமுகமாக வேண்டுமானால், கட்சிகளை உடைத்து தனக்கு ஆதரவான எம்எல்ஏக்களை இழுத்திருக்கலாம். ஆனால் முதல்வர் விஜய், தமிழக மக்கள் விரும்பும் ஆட்சியை தருவேன் என்று பதவியேற்பு விழாவில் பேசினார். ஆனால் அவர் பேச்சுக்கும், செயலுக்கும் சம்பந்தமே இல்லாதது போன்று அவர் நடவடிக்கை உள்ளது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. விஜய் 5 ஆண்டு பதவியில் நீடிக்க 30 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த ஒரு பெரிய கட்சியான அதிமுகவை உடைக்க முன்நின்று நடத்துவது கண்டனத்துக்குரியது\\” என்றார்.
இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தரப்பைச் சேர்ந்த ஓ.எஸ்.மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்து கூறியதாவது:
எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுவது முழுக்க முழுக்க அவதூறு. திமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறுவது அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு பரப்பப்படும் தவறான தகவல். திமுகவும் அதிமுகவும் என்றைக்கும் எதிர்க்கட்சிகளாகவே செயல்பட்டு வருகின்றன. எடப்பாடிக்கு ஆதரவாக 26 எம்எல்ஏக்கள் கடிதம் வழங்கியுள்ளனர். அந்த ஆதரவின் அடிப்படையில்தான் சட்டமன்ற கொறடா உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 47 எம்எல்ஏக்கள் ‘எடப்பாடி பழனிசாமியே சட்டமன்றக் குழுத் தலைவர்’ என கையெழுத்திட்டு சபாநாயகரிடம் மனு கொடுத்துள்ளனர். அதிமுகவில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கே உள்ளது. பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்து சி.வி.சண்முகம் பேசியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து. கூட்டணி தொடர்பான முடிவுகளை அறிவிக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது. சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பேசும் கருத்துகளுக்கு பின்னால் அமைச்சர் பதவி ஆசை இருக்கிறது.
இதற்கிடையில், இன்று நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராகவே அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதனை மீறி யாரேனும் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தூய்மையான ஆட்சி வழங்குவேன் என்று கூறி வரும் முதல்வர் விஜய், சி.வி.சண்முகம் தரப்பின் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்க மாட்டார் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால் விஜய் அரசுக்கு இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வேலுமணி அணியினர் ஆதரவாக வாக்களித்தால் அவர்கள் மீது கட்சி கடும் நடவடிக்கை எடுக்கும் என்று எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார். அவர்கள் மீது கட்சி விரோத நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டவல்லுநர்களுடன் ஆலோசனையும் நடத்தி வருகிறார். இதனால் அதிமுகவில் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதோடு, பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
எஸ்.பி.வேலுமணி அணி எம்எல்ஏக்கள் விவரம்
எஸ்.பி.வேலுமணி – தொண்டாமுத்தூர் தொகுதி, சி.வி.சண்முகம் – மயிலம் தொகுதி, சி.விஜயபாஸ்கர் – விராலிமலை தொகுதி, நத்தம் விஸ்வநாதன் – நத்தம் தொகுதி, இசக்கி சுப்பையா – அம்பாசமுத்திரம் தொகுதி, கே.பி.அன்பழகன் – பாலக்கோடு தொகுதி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் – கரூர் தொகுதி, ஆர்.காமராஜ் – நன்னிலம் தொகுதி, கே.சி.வீரமணி – ஜோலார்பேட்டை தொகுதி, பாலகிருஷ்ணரெட்டி – ஓசூர் தொகுதி, கோ.அரி – திருத்தணி தொகுதி, சுகுமார் – ஆற்காடு தொகுதி, மரகதம் வெற்றிவேல் – பாப்பிரெட்டிபட்டி தொகுதி, மரகதம் குமரவேல் – மதுராந்தகம் தொகுதி, லீமா ேராஸ் – லால்குடி தொகுதி, சேகர் – பரமத்தி வேலூர் தொகுதி, சத்தியபாமா – தாராபுரம் தொகுதி, நடராஜ் – காங்கேயம் தொகுதி, ஜெயக்குமார் – பெருந்துறை தொகுதி, அரிபாஸ்கர் – அந்தியூர் தொகுதி, ரவி மனோகரன் – பழனி தொகுதி, தாமரை ராஜேந்திரன் – அரியலூர் தொகுதி, ராகேஷ் – சங்கராபுரம் தொகுதி, அருண்மொழிதேவன் – புவனகிரி தொகுதி, திலீபன் ஜெய்சங்கர் – சங்கரன்கோவில் தொகுதி உள்ளிட்ட 28 எம்எல்ஏக்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகத்துக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், நேற்று முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
- அதிமுகவில் போர்க்கொடி தூக்கியுள்ள அணியைச் சேர்ந்த சி.வி.சண்முகத்தின் வீட்டுக்கு விஜய் நேற்று சென்றார்.
- எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட 28 அதிமுக எம்எல்எக்களுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.
- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு செல்லாமல், அவரை புறக்கணித்து விட்டு, அதிமுக அதிருப்தி அணியை விஜய் சந்தித்தது, கட்சிக்குள் பிளவை ஊக்குவிக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
