கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கள்ளக்காதல் விவகாரத்தில் ராணுவ வீரர் மற்றும் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு பின்னர் உடல்களை மூட்டையில் கட்டி பைக்கில் எடுத்து வந்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ராணுவ வீரரின் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலையில், ஆலப்பட்டி ஊராட்சி வெப்பாலம்பட்டி சாலை ஓரத்தில், சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். அதே சாலையில், சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில், கொடுகூர் என்ற இடத்தில் அதே பாணியில் சாலையோரம் சுமார் 35 வயதுடைய வாலிபர் உடலும், பெட்ஷீட்டால் சுற்றி, தென்னை ஓலைகளை மேலே போட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் இருந்தது. அந்த உடல்களை மீட்டு கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து
விசாரணை நடத்தினர். மேலும், 2 சடலங்களையும் போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அங்குள்ள ‘மொபைல் டவர்’ விவரங்களை சேகரித்து விசாரணை செய்தனர். இதில், கொலையானவர்கள் கிருஷ்ணகிரி டவுன் அடுத்த பாலக்குறி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் மகேஸ்குமார்(43), அவரது தந்தை செல்லப்பன்(62) முன்னாள் ராணுவ வீரர் என்பது தெரிய வந்தது. மேலும் கொலை வழக்கு தொடர்பாக, மகேஸ்குமாரின் மனைவி பானுப்பிரியாவின்(38) மீது ஏற்பட்ட சந்தேகத்தை தொடர்ந்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தனது கள்ளக்காதலன் பூவரசன்(24) என்பவருடன் சேர்ந்து கணவன், மாமனார் ஆகியோரை கொலை செய்தது தெரியவந்துள்ளது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதுபற்றி போலீசார் கூறியதாவது: மகேஸ்குமார் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார்.
அவரது தந்தை செல்லப்பனும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். பானுப்பிரியாவுக்கும் மேல்கொட்டாய் பகுதியை சேர்ந்த கோழி வாகனம் ஓட்டும் டிரைவர் தளபதி என்கிற பூவரசனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதுபற்றி மகேஸ்குமாருக்கு தகவல் சென்றது. விடுமுறைக்கு வந்த அவர் கள்ளக்காதல் விவகாரம் குறித்து மனைவியிடம் கேட்டுள்ளார். ஆனால், அவர் மறுத்து வந்துள்ளார். ஆனால், மகேஸ்குமார் பானுப்பிரியாவின் செல்போனை வாங்கி பார்த்துள்ளார். அதில் இருந்த தகவல்களை வைத்து மனைவியின் கள்ளக்காதலை உறுதி செய்தார். கடந்த 11ம் தேதி இரவு வீட்டுக்கு மதுபோதையில் வந்த மகேஸ்குமார், பானுப்பிரியாவை அடித்து தகராறு செய்துள்ளார்.
இதுபற்றி பானுப்பிரியா தனது கள்ளக்காதலன் பூவரசனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து தனது எலக்ட்ரிக் பைக்கில் அங்கு வந்த பூவரசன், மகேஸ்குமாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது பானுப்பிரியா கணவனை பிடித்துக் கொள்ள பூவரசன் அவரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மகேஸ்குமார் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். சத்தம் கேட்டு அருகில் வசிக்கும் அவரது தந்தை செல்லப்பன் அங்கு வந்துள்ளார். அவரையும் அதேப்போல பானுப்பிரியா பிடித்துக் கொள்ள பூவரசன் அவரையும் கத்தியால் குத்தியுள்ளார். நிலைகுலைந்து கீழே சரிந்த அவரும் உயிரிழந்தார். பின்னர் இருவரின் உடல்களையும், சாக்கு மூட்டையில் தனித்தனியாக கட்டி, தனது பைக் மூலமாக ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் அடுத்தடுத்து போட்டுள்ளனர். பிறகு, பூவரசனும் பானுபிரியாவும் டீசல் வாங்கி வந்துள்ளனர். சடலங்களின் மீது அங்கிருந்த தென்னை மட்டை உள்ளிட்டவற்றை போட்டு எரித்துவிட்டு ஒன்றும் தெரியாததை போல சென்றுள்ளனர். என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பூவரசன், பானுப்பிரியா மட்டும் இந்த கொலையில் ஈடுபட்டார்களா? அல்லது இதற்கு வேறு யாராவது உடந்தையாக இருந்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
