×

கரூர் திண்ணப்பா கார்னரில் கடும் போக்குவரத்து நெரிசல் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கரூர், மே 12: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திண்ணப்பா கார்னர் பகுதியில் நிலவி வரும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். கரூர் பேரூந்து நிலையத்தில் இருந்து நெரூர், வாங்கல், சேலம் பைபாஸ் சாலை, சோமூர், திருமுக்கூடலூர்ர், சர்ச் கார்னர், வெங்கமேடு, வாங்கப்பாளையம், புலியூர், ஐந்து ரோடு, பசுபதிபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் தெற்கு மற்றும் வடக்கு பிரதட்சணம் சாலை வழியாக செல்கின்றன.வடக்கு மற்றும் தெற்கு பிரதட்சணம் சாலைகள் இணையும் இடத்தில் திண்ணப்பா கார்னர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் இருந்து ராமகிருஷ்ணபுரம், செங்குந்தபுரம், காமராஜ்புரம், எம்ஜி சாலை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு சாலை பிரிகிறது. இந்த பகுதிகளில் ஜவுளி நிறுவனங்கள் அதிகளவு உள்ள காரணத்தினால் வாகன போக்குவரத்து திண்ணப்பா கார்னர் வழியாக சென்று வருகிறது.

திண்ணப்பா கார்னர் பகுதியில் சிறிய அளவு ரவுண்டானா அமைக்கப்பட்டிருந்தாலும், இந்த பகுதியில் இருந்து மூன்று வழிகளில் வாகன போக்குவரத்து நடைபெற்று வருவதால், போதிய வழிகாட்டுதல் இல்லாமல், வாகனங்கள் குறுக்கே சென்று வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருவதோடு, சில சமயங்களில் சிறு விபத்துக்களும் நடைபெற்று வருகிறது.எனவே, இதுபோன்ற நிகழ்வுகளை கட்டுப்படுத்தும் வகையில், திண்ணப்பா கார்னர் பகுதியில், நெருக்கடி இல்லாத வகையில் போக்குவரத்து நடைபெற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி இந்த பகுதியில் நெரிசல் இல்லாத வகையில் வாகன போக்குவரத்து நடைபெற தேவையான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags : Karur Thinnappa Corner ,Karur ,Thinnappa Corner ,Karur Corporation ,Nerur ,Vangal ,Salem Bypass Road ,Somoor ,Thirumukudalur ,
× RELATED தோகைமலை அருகே 2 குழந்தைகளை தவிக்கவிட்டு இளம்பெண் மாயம்