கரூர், மே. 12: மக்கள் குறைதீர் கூட்டம் கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் தலைமை வகித்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் தெரிவித்ததாவது: பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்திடவும், பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் வராத வகையில் மனுவின் மீது உரிய தீர்வு வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன்கள், பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 173 மனுக்கள் வரப்பெற்றன.மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி மனுக்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தின் தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென நடத்தப்பட்டு வரும் குறைதீர் முகாமில் வீட்டுமனைப் பட்டா, உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட 21 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் தெரிவித்தார்.
இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.898 மதிப்பீட்டில் ஊன்றுகோல்களையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.1,83,900 மதிப்பீட்டில் செயற்கை கால்களையும், 1 பயனாளிக்கு ரூ.76,700 மதிப்பீட்டில் செயற்கை கையும், 1 பயனாளிக்கு ரூ.63,600 மதிப்பீட்டில் செயற்கை கால், 1 பயனாளிக்கு ரூ.3285 மதிப்பீட்டிலான காதொலிகருவியும் மற்றும் 1 பயனாளிக்கு ரூ.16195 மதிப்பீட்டில் திறன் பேசியும் என மொத்தம் ரூ.5,29,376 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் திரு.கு. ரவிகுமார் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவ ட்ட வருவாய் அலுவலர் விமல்ராஜ், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் பிரகாசம், கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலர் சக்திபாலகங்காதர், உதவி ஆணையர் முருகேசன் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
