சென்னை: வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைந்தது. அதே நேரத்தில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரித்தது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த 9ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்சத்து 13,200க்கு விற்கப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.280, பார் வெள்ளி ரூ.2.80 லட்சத்துக்கும் விற்பனையானது. 11ம் தேதி (நேற்று முன்தினம்) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும்.
இதனால், தங்கம், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,100க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12,800க்கும் விற்பனையானது. அதே நேரத்தில் வெள்ளி விலையை பொறுத்தவரையில் நேற்று அதிகரித்து காணப்பட்டது. அதாவது கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.285க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து பார் வெள்ளி ரூ.2.85 லட்சத்துக்கும் விற்பனையானது.
