ரோம்: இத்தாலியன் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் போட்டியில் நேற்று, அமெரிக்க வீராங்கனை இவா யோவிச் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இத்தாலியின் ரோம் நகரில் இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் 3வது சுற்றுப்போட்டியில் அமெரிக்க வீராங்கனைகள் இவா யோவிச், டெய்லர் டவுன்சென்ட் மோதினர். இப்போட்டியின் துவக்கம் முதல் இவா யோவிச் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்தினார். சாதுரியமாக ஆடிய அவர் முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 6-2 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார்.
அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ரஷ்ய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயா, சுவிஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக் மோதினர். சிறப்பாக ஆடிய அன்னா, முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர் 6-3 என்ற புள்ளிக்கணக்கில் அந்த செட்டை எளிதில் கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய அவர் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
