புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணிஅமைச்சரவையில் கடந்த முறைபோல், தற்போதும் என்ஆர் காங்கிரசில் 3 பேருக்கு அமைச்சர் பதவியும், பாஜவில் ஒருவருக்கு சபாநாயகர் பதவியும், 2 பேருக்கு அமைச்சர் பதவியும் வழங்குவது என்று முடிவு செய்யப்படடுள்ளது. இந்நிலையில் என்ஆர் காங்கிரசில் மூத்த எம்எல்ஏவான ராஜவேலுக்கு அமைச்சர் பதவி கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
மேலும் முன்னாள் அமைச்சர்கள் திருமுருகன், மல்லாடி கிருஷ்ணா ராவ், முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து, உழவர்கரை தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்எல்ஏவான நாராயணசாமி இடையே அமைச்சர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இதுதவிர, வையாபுரி மணிகண்டன், மோகன்தாஸ் ஆகியோரும்கேட்கின்றனர். இதனால் ராஜவேலுவை தவிர்த்து மீதமுள்ள 2 அமைச்சர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது.
இதேபோல், பாஜவுக்கு ஒதுக்கப்பட்ட 2 அமைச்சர் பதவியை பெறுவதில் பாஜ சட்டமன்ற கட்சி தலைவர் நமச்சிவாயம், திருநள்ளாறு எம்எல்ஏ ராஜசேகரன், கடந்த முறை இலாகாவே ஒதுக்கப்படாமல் அமைச்சராக இருந்த ஜான்குமார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதில் 2 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் நிலையில் ஒருவர் சபாநாயகராக பதவியேற்பார். ஆனால், 3 பேரும் சபாநாயகர் பதவியை ஏற்க மறுத்து, அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் கட்சி தலைமை, யாருக்கு என்ன பதவி என்பதை அறிவிக்கும் என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறின. இதனால் புதுவை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
* 13ம் தேதி ரங்கசாமி முதல்வராக பதவியேற்பு: ஜனாதிபதி ஒப்புதல்
உள்துறை அமைச்சகத்தின் இணை செயலர் பிரவீன் குமார் ராய் பிறப்பித்துள்ள உத்தரவில், ஜனாதிபதி ஒப்புதலோடு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்வராக ரங்கசாமி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பதவியேற்கும் நாளில் இருந்து இந்த நியமனம் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமியை பதவியேற்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, வருகிற 13ம் தேதி காலை 11.48 மணிக்கு என்ஆர் காங்., தலைவர் ரங்கசாமி 5வது முறை முதல்வராக பதவியேற்கவுள்ளார். அவருக்கு கவர்னர் கைலாஷ்நாதன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமானமும் செய்து வைக்கிறார்.
