சென்னை: தவெக தலைவர் நடிகர் விஜய், தமிழக முதல்வராக பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை வருகிறார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று காலை விஜய் முதல்வராக பதவி ஏற்கிறார். ஆளுநர் அர்லேகர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். பதவியேற்பு விழாவில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்.
அதற்காக ராகுல் காந்தி இன்று காலை 6 மணிக்கு, டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் புறப்பட்டு, காலை 8.40 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் நான்கு வருகை பகுதிக்கு வருகிறார். அவரை சென்னை விமான நிலையத்தில் காங்கிரசார் வரவேற்கின்றனர்.
அதன்பின்பு ராகுல் காந்தி, சென்னை விமான நிலையத்தில் இருந்து, காரில் புறப்பட்டு, பதவி ஏற்பு விழாவுக்கு செல்கிறார். பதவி ஏற்பு விழா முடிந்ததும் இன்று பிற்பகல் சென்னையில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம், டெல்லிக்கு திரும்பி செல்கிறார். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில், முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
