×

தேர்தல் முடிவு வந்து ஒரு வாரம் ஆகியும் கேரளத்தில் புதிய முதல்வர் யார்? முடிவெடுக்க முடியாமல் திணறும் காங்கிரஸ்: டெல்லியில் முக்கிய பேச்சுவார்த்தை

 

திருவனந்தபுரம்: கேரளத்தில் முதல்வரை தேர்ந்தெடுக்க முடியாமல் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து கடும் குழப்பம் நிலவி வருகிறது. முதல்வர் பதவிக்கு போட்டியிடும் சதீசன், ரமேஷ் சென்னித்தலா மற்றும் கே.சி. வேணுகோபாலிடம் நேற்று காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் டெல்லியில் பல மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கேரளத்தில் மொத்தமுள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளில் 102 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனால் தேர்தல் முடிவு வந்து ஒரு வாரம் ஆன நிலையில் இதுவரை முதல்வரை அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவிக்கு கடந்த பினராயி விஜயன் ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சதீசன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா மற்றும் ஆலப்புழா எம்பி கே.சி. வேணுகோபால் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இவர்கள் மூன்று பேருமே முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. இந்நிலையில் முதல்வரை தேர்வு செய்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் மேலிடக்குழு திருவனந்தபுரத்திற்கு வந்தது. அவர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள், வேணுகோபால், சதீசன், ரமேஷ் சென்னித்தலா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர். இதில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.

இதைத் தொடர்ந்து வேணுகோபால், சதீசன், ரமேஷ் சென்னித்தலா மற்றும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் சன்னி ஜோசப் ஆகியோரை காங்கிரஸ் மேலிடம் டெல்லிக்கு வரவழைத்தது. நேற்று அவர்களுடன் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் காலை முதல் இரவு வரை பேச்சுவார்த்தை நடத்தினர்.

மூன்று பேருமே தங்களுக்குத்தான் முதல்வர் பதவி வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். பெரும்பாலான எம்எல்ஏக்களின் ஆதரவு தனக்குத்தான் என்று வேணுகோபாலும், 3 பேரில் நான் தான் சீனியர் என்று ரமேஷ் சென்னித்தலாவும், தன்னுடைய தலைமையின் கீழ் தான் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது என்று சதீசனும் கூறினர்.

இதைத் தொடர்ந்து நேற்றும் முதல்வரை தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இன்று மீண்டும் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கிடையே 3 பேருக்கும் ஆதரவு தெரிவித்து கேரளம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அப்புறப்படுத்த காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Kerala ,Congress ,Delhi ,Thiruvananthapuram ,Congress party ,Satish ,Ramesh Chennitala ,K. C. Congress ,Mallikarjuna Kargay ,Rahul Gandhi ,Venugopal ,
× RELATED தவெக ஆட்சியில் காட்சி காட்சியாக...