கொல்கத்தா: பிரதமர் மோடி முன்னிலையில், மேற்கு வங்கத்தின் முதல் பாஜ முதல்வராக சுவேந்து அதிகாரி நேற்று பதவியேற்றார். இதன் மூலம், மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பாஜ ஆட்சி அமைந்தது. மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 294 தொகுதிகளில் பாஜ 207 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசின் 15 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து, பாஜ எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், பாஜ தலைமையிலான புதிய அரசு பதவியேற்பு விழா கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் நேற்று நடந்தது.
இதில், பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், பாஜ, என்டிஏ கூட்டணி கட்சி முதல்வர்கள் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காலையில் இருந்தே விழா நடக்கும் மைதானத்திற்கு வரத் தொடங்கினர். பிரதமர் மோடி வந்ததும் ‘பாரத் மாதா கி ஜெய்’ என பெரும் கோஷமிட்டனர். பிரதமர் மோடி விழா மேடைக்கு வந்ததும், மக்கள் தீர்ப்பிற்கு மரியாதை செலுத்தும் வகையில், கைகூப்பியவாறு மண்டியிட்டு வணக்கம் தெரிவித்தார். அப்போது, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பாஜ தொண்டர்கள் கரகோஷம் எழுப்பினர்.
அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி முன்னிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் சுவேந்து அதிகாரிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து பாஜவின் மூத்த தலைவரும் முன்னாள் மாநில தலைவருமான திலீப் கோஷ், அக்னிமித்ரா பால், அசோக் கீர்த்தனியா, ஷுதிராம் டுடு, நிதிசித் பிரமாணிக் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதன் மூலம் சுதந்திரத்திற்குப் பிறகு மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பாஜ ஆட்சி அமைந்துள்ளது.
பதவியேற்றதைத் தொடர்ந்து முதல்வராக தனது பணியை தொடங்கும் முன்பாக நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திராநாத் தாகூரின் பூர்வீக இல்லத்திற்கு சென்ற சுவேந்து அதிகாரி அஞ்சலி செலுத்தினார். முதல்வராக பதவியேற்ற சுவேந்து அதிகாரிக்கு தனது எக்ஸ் தளத்தில் பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி, ‘‘மேற்கு வங்க முதல்வராக பதவியேற்ற சுவேந்து அதிகாரிக்கு வாழ்த்துகள். மக்களுடன் ஆழமான பிணைப்பைக் கொண்டிருந்தவரும், அவர்களின் விருப்பங்களை மிக நெருக்கத்திலிருந்து புரிந்துகொண்டவருமான தலைவராக அவர் முத்திரை பதித்துள்ளார். அவரது பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய நல்வாழ்த்துகள்’’ என கூறி உள்ளார்.
* 9 மாநிலங்களில் முதல் முறை பாஜ முதல்வர்கள்
கடந்த 2014ல் மோடி பிரதமான பிறகு, 9 மாநிலங்களில் முதல் முறையாக முதல்வர் பதவியை பாஜ கைப்பற்றி உள்ளது. 2014ல் அரியானா, மகாராஷ்டிராவில் முதல் முறையாக பாஜ முதல்வர்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அசாம் (2016), அருணாச்சல பிரதேசம் (2016), மணிப்பூர் (2017), திரிபுரா (2018), ஒடிசா (2024), பீகார் (2026), மேற்குவங்கம் (2026) என பாஜவின் ஆட்சி பரவத் தொடங்கியது.
2018ல் திரிபுராவில் இடதுசாரிகளின் பல ஆண்டுகால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த பாஜ, 2024ல் ஒடிசாவில் பிஜு ஜனதா தளத்தின் 24 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு கட்டியது. பீகாரில் நீண்டகால முதல்வராக நிதிஷ்குமார் சமீபத்தில் பதவி விலகிய நிலையில் பாஜ முதல்வராக சாம்ராட் சவுத்ரி பதவியேற்றார். அதைத் தொடர்ந்து தற்போது மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பாஜ முதல்வர் பொறுப்பேற்றுள்ளார்.
* 98 வயது மூத்த நிர்வாகி காலில் விழுந்த மோடி
பதவியேற்பு விழா மேடையில் 98 வயது மூத்த பாஜ நிர்வாகி மாகன்லால் சர்காருக்கு சால்வை அணிவித்த பிரதமர் மோடி அவரது கால்களை தொட்டு வணங்கினார். 1952ம் ஆண்டு, காஷ்மீரில் இந்திய தேசியக் கொடியை ஏற்றும் இயக்கத்தின் போது ஜனசங்க நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜியுடன் சென்ற மாகன்லால் சர்க்கார் கைது செய்யப்பட்டார். கட்சியின் ஆரம்பகால அடித்தள தலைவர்களில் ஒருவராக மாகன்லால் சர்க்கார் திகழ்வதாக பாஜ கட்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
