×

எதிர்க்கட்சிகளுக்கு மம்தா அழைப்பு: பாஜவுக்கு எதிராக ஒன்றிணைவோம்

 

கொல்கத்தா: மேற்கு வங்க தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி அடைந்த நிலையில், கவிஞர் ரவீந்திரநாத் தாக்கூரின் பிறந்தநாளையொட்டி, அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜி கொல்கத்தா காளிகாட்டில் உள்ள தனது வீட்டின் முன் கூடியிருந்த கட்சியினரிடம் நேற்று பேசியதாவது:

பாஜவை எதிர்க்கும் இடதுசாரிகள், தீவிர இடதுசாரிகள் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும், மாணவர் சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகளும் பாஜவுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும். இதில் தேசிய கட்சிகளும் இணைய வேண்டும். இதுதொடர்பாக அரசியல் கட்சிகள் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால், பேசத் தயாராக இருக்கிறேன். நமது முதல் எதிரி பாஜ என்பதில் உறுதி வேண்டும்.

தேர்தல் முடிவுக்குப் பிறகு அனைத்து எதிர்கட்சி தலைவர்களும் என்னை தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்தனர். அகிலேஷ் யாதவ் நேரில் வந்து என்னை சந்தித்தார். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். தேர்தலில் நாங்கள் அநியாயமாக தோற்கடிக்கப்பட்டோம் என்பதை எதிர்காலத்தில் நிரூபிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

* சமூக ஊடக கணக்குகளில் சுயவிவரத்தை மாற்றினார்

தேர்தல் தோல்வியை தொடர்ந்து மம்தா பானர்ஜி தனது எக்ஸ் மற்றும் பேஸ்புக் சமூக ஊடக கணக்குகளில் தனது சுயவிவரத்தை (பயோ) மாற்றி உள்ளார். அதில், திரிணாமுல் காங்கிரஸ் நிறுவன தலைவர், மேற்கு வங்க முதல்வர் (15வது, 16வது, 17வது சட்டப்பேரவைகள்) என பதிவிட்டுள்ளார். மேற்கு வங்கத்தின் 18வது சட்டப்பேரவை தேர்தலில் பாஜ வென்று நேற்று ஆட்சிப் பொறுப்பேற்றது. தோல்விக்குப் பிறகு முதல்வர் பதவியை மம்தா ராஜினாமா செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Mamata Banerjee ,BJP ,Kolkata ,Trinamool Congress ,West Bengal elections ,Chief Minister ,Kalighat ,Rabindranath Tagore ,
× RELATED ஓடும் ரயிலில் தமிழக சிறுமியை தூக்கிச் சென்று பலாத்காரம்