×

விஜய்க்கு ஆதரவாக ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்த முயன்ற பெண்கள் உள்பட 4 பேர் கைது

 

ஆலந்தூர், மே 9: ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்த முயன்ற பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றும் நேற்று மாலை வரை போதிய பெரும்பான்மை கிடைக்காததால் தவெக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்க சிக்கல் நீடித்து வந்தது. பெரும்பான்மைக்கு ஆதரவு தருபவர்களின் விபரங்களை கூறினால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும் என ஆளுநர் கூறி வந்ததால் தவெக தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதன் எதிரொலியாக நேற்று காலை முதலே ஆளுநர் மாளிகை முன்பு தவெகவினர் வருவதும், போவதுமாக இருந்தனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு, அவ்வழியாக வருபவர்களை திருப்பி அனுப்பிய வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை ஆளுநர் அலுவலக சாலை வழியாக நடந்து வந்த புளியந்தோப்பை சேர்ந்த தனம் (61), அவரது மகள் கீதா (46) ஆகிய இருவரும் திடீரென தவெக கொடியினை அசைத்து மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கோட்டூர்புரம் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
அதேபோல் ஆளுநர் அலுவலக சாலையின் எதிரே ஆட்டோவில் வந்த தஞ்சாவூர் ஒரத்தநாட்டை சேர்ந்த சூர்யா (43) என்பவர் திடீரென தவெக கொடியுடன் ஆட்டோவிலிருந்து இறங்கி சங்கை எடுத்து சத்தமாக ஊதி பரபரப்பை ஏற்படுத்தினார். அவரையும் பாதுகாப்பு போலீசார் தடுத்து நிறுத்தி ஆட்டோவில் ஏற்றி கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அதேபோல் திரைப்பட இயக்குனர் சுரேஷ் தவெக கொடியுடன் ஆளுநர் மாளிகை அருகே வந்து நின்று `மறுக்காதே மறுக்காதே மக்கள் தீர்ப்பை மறுக்காதே, தடுக்காதே தடுக்காதே தளபதி விஜய் முதல்வராவதை தடுக்காதே’ என கோஷமிட்டார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தியபோது திமிறிக்கொண்டு ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முயன்றார். உடனே போலீசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கி ஆட்டோவில் ஏற்றி கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அனைவரையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் நேற்று ஆளுநர் மாளிகை அருகே பரபரப்பு நிலவியது.

Tags : Governor ,Vijay ,Alandur ,Mansion ,Tamil Nadu Assembly ,
× RELATED அனைத்து பணிமனைகளிலும் காலியான பணியிடங்களை நிரப்ப வேண்டும்