வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியில் நடந்த கடற்படை மோதலைத் தொடர்ந்து ஈரானை உலக வரைபடத்திலிருந்து அழித்துவிடுவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த ஏப்ரல் 8ம் தேதி தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும், நேற்று ஹார்முஸ் ஜலசந்தியில் பயணம் செய்த அமெரிக்க கடற்படையின் 3 அழிப்புக் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக அமெரிக்காவின் அப்பாச்சி மற்றும் சீஹாக் ஹெலிகாப்டர்கள் ஈரான் ராணுவ நிலைகள் மற்றும் அதிவேகப் படகுகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தின.
இந்தத் தாக்குதலில் ஈரானின் கெஷ்ம் தீவு மற்றும் பந்தர் அப்பாஸ் பகுதிகளில் பெரும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும், தங்களது எண்ணெய் கப்பல் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் இடங்கள் தாக்கப்பட்டதாகவும் ஈரான் ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன. அமெரிக்கத் தரப்பில் எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு ராணுவம் உறுதி செய்துள்ளதுடன், இந்தப் பதற்றமான சூழலால் வளைகுடா பகுதியில் சுமார் 1,500 கப்பல்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கின்றன. இந்தக் கடற்படை மோதலைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டிரம்ப், ஈரானுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘ஈரான் இன்று நம்முடன் விளையாடிப் பார்த்துள்ளது, அவர்களை நாங்கள் ஊதித் தள்ளிவிட்டோம். அமெரிக்கக் கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால், ஈரான் உலக வரைபடத்திலிருந்தே துடைத்து எறியப்படும். அவர்கள் அணு ஆயுதம் தயாரிப்பதை ஒருபோதும் அமெரிக்கா அனுமதிக்காது. மீண்டும் வம்புக்கு வந்தால் இதுவரை அவர்கள் சந்திக்காத மிகப்பெரிய அடியை ஈரான் சந்திக்கும். தற்போது ஈரான் பேச்சுவார்த்தைக்கு இணங்கி வருவதாகவே தெரிகிறது’ என்று தெரிவித்தார். தற்போது பாகிஸ்தான் நாடு இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வரும் நிலையில், அமெரிக்க ராணுவம் தனது உச்சகட்ட தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
