×

நலம் யோகம்

நன்றி குங்குமம் தோழி

உடலுக்கு ஒளி…மனதுக்கு அமைதி! சந்திர நமஸ்காரம்

பெண்களின் உடல் மற்றும் சந்திர சுழற்சிக்கு (Lunar Cycle) இடையிலான தொடர்பு என்பது ஆழமான ஒன்று. இது யோகா மற்றும் ஆயுர்வேதம் பாரம்பரிய முறைகளில் முக்கியமான ஒன்றாய் கூறப்படுவதுடன், பெண்களின் உடல் ‘சந்திர சக்தி’ உடையதாகவும் கருதப்படுகிறது.24 மணி நேர சூரிய சுழற்சியை ஆண்களின் உடல் பின்பற்றுகிறது என்றால், சந்திரனின் வளர்தல், தேய்தல் நிலைகளை பெண்களின் உடல் 28 நாட்கள் கொண்ட சுழற்சியில் ஒத்து இயங்குகிறது. அதாவது, சந்திரன், அமாவாசை முதல் பௌர்ணமி வரை வளர்ந்து மீண்டும் தேய்வதைப்போல, பெண் உடலிலும் ஆற்றல், மனநிலை, மெட்டபாலிசம் போன்றவை மாற்றம் பெறுகின்றன.

அதாவது, பெண்களின் மாதவிடாய் சுழற்சி என்பது மென்சுரல் (Menstrual), பாலிக்குலர் (Follicular), ஓவுலேஷன் (Ovulation), லூட்டியல் (Luteal) என நான்கு கட்டங்களாய் இதில் பார்க்கப்படுகிறது. இந்த ஒவ்வொரு கட்டத்திலும் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படும்.பெண்ணின் மென்சுரல் கட்டம் என்பது, உடலின் இயற்கையான டீடாக்ஸ் காலம் என்பதால், இது உடல் ஓய்வுக்கான நேரம்.

பாலிக்குலர் கட்டத்தில் ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பதால் உடலில் சுறுசுறுப்பு அதிகமாகும். புதிய முயற்சிகளுக்கும், உடற்பயிற்சிக்கும் இது சிறந்த நேரம். ஓவுலேஷன் கட்டத்தில் பெண்கள் அதிக உற்சாகம் மற்றும் அதீத சக்தியுடன் இருப்பார்கள். லூட்டியல் கட்டத்தில் புரோஜெஸ்ட்டிரோன் அதிகரிப்பதால் உடல் இலகுவாகும். அப்போது பெண்களுக்கு ஓய்வுக்கான தேவை அதிகரிக்கும், உணவின் மீதான ஈர்ப்பும் கூடும்.

பொதுவாகவே நமது உணவுக் கட்டுப்பாட்டுக்கான திட்டங்கள் (Diet chart) ஆண்களின் உடல் அமைப்பை அடிப்படையாய் கொண்டே வடிவமைக்கப்படுகிறது. இதில் ஆண்களின் ஹார்மோன் நிலைத்தன்மையானது என்பதால், ஒரேமாதிரியான உணவுக் கட்டுப்பாடு மற்றும் வொர்க்கவுட் முறைகள் அவர்களுக்கு பயனளிக்கும்.ஆனால், பெண்களின் உடல் மாதம் முழுவதும் மாறுவதால், இந்த உணவுக் கட்டுப்பாட்டு முறைகள் இவர்களுக்கு பொருந்தாது. இதனால்தான் உடல் எடை குறையாமை, உடல் சோர்வு, மாதவிடாய் நிற்கும் போது ஏற்படுகிற பெரிமெனோபஸ் பிரச்னைகள் பெண்களுக்கு வருகின்றன. ‘கடுமையான உணவுக் கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றியும் எனக்கு பலன் கிடைக்கவில்லையே’ என்ற மன அழுத்தத்திற்கு பெண்கள் ஆளாகின்றனர்.

தங்களின் உடல் சுழற்சியை பெண்கள் புரிந்துகொண்டு அதற்குத் தகுந்த உணவையும், உடற்பயிற்சியையும் தங்களுக்காக வடிவமைத்துக் கொண்டால், உடலுடன் இணைந்து அவை செயல்படுவதுடன், மிக எளிதாக பலன் கிடைக்கும். மென்சுரல் காலகட்டத்தில் சூடான உணவுகள் மற்றும் இரும்புச்சத்து, நீர் சத்து உள்ள உணவுகள் மிகவும் முக்கியம். பாலிக்குலர் கட்டத்தில் பெண்கள் எளிதான உணவுகளையும், பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், முளைகட்டிய தானியங்களை எடுக்க உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

ஓவுலேஷன் கட்டத்தில் புரதம் மற்றும் நார்சத்து அதிகம் இருக்கின்ற உணவே உடலின் செயல்திறனை பெண்களுக்கு அதிகரிக்கும். லூட்டியல் கட்டத்தில் முழு தானியங்கள், கிழங்கு வகைகள், ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை எடுக்க உடல் நிலைத்தன்மை பெறும். காஃபின் மற்றும் இனிப்பு வகைகளை பெண்கள் உணவாய் எடுப்பதைக் குறைப்பதே ஆரோக்கியத்திற்கு நல்லது.
சந்திர நமஸ்காரம்சூரிய நமஸ்காரம் போல இது ஆற்றலை அதிகரிப்பதில்லை. மாற்றாக மனதையும் உடலையும் குளிர்வித்து அமைதியாக்கும். இதில் சந்திர சக்தி, சந்திர நமஸ்காரம் போன்றவை ஹத்த யோகா மூலமாகவே வெளிப்படுகிறது.

மாலை அல்லது ஓய்வு நேரத்தில் சந்திர நமஸ்காரம் செய்வதே நல்லது. சந்திர நமஸ்கார் முக்கியமாக சுவாதிஷ்டான சக்கரத்தின் மீது தாக்கம் செலுத்தும். இது நரம்பு மண்டலத்தை சமநிலைப்படுத்தி, பாராசிம்பதெடிக் மண்டலத்தை செயல்படுத்துகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. பெண்களின் இடுப்பு பகுதியில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இனப்பெருக்க உறுப்பை வலுப்படுத்துவதுடன், பெண்களின் உணர்வுகள், படைப்பாற்றல் மற்றும் அவர்களின் இனப்பெருக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது.

இதில் மணிப்பூர சக்கரம், ஜீரண சக்தியை ஊக்குவிக்கும். அனாஹத சக்கரம் மன அமைதி மற்றும் கருணை அதிகரிக்கும். குறிப்பாக பெண்களின் மாதவிடாய் சுழற்சி நிற்றல் (Perimenopause) காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் பாதிப்படையும் பெண்களுக்கு, சந்திர நமஸ்காரம் சக்தி வாய்ந்த பயிற்சி. இது உடலின் இயல்பான ரிதத்தை மதிக்கவும், உள்ளார்ந்த அமைதியை அடையவும் உதவுகிறது. பெண்கள் தங்கள் உடலில் சந்திர சுழற்சியுடன் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சியோடு, வாழ்க்கை முறையை ஒத்திசைக்கும் போது, அவர்கள் நல்ல ஆற்றல், ஹார்மோன் சமநிலை மற்றும் முழுமையான நலத்தை அனுபவிக்க முடியும். பழமையான ஞானத்தையும் நவீன வாழ்க்கை முறையையும் இணைக்கும் ஒரு அழகான பாலமாக சந்திர நமஸ்கார் திகழும்.

மொத்தத்தில், சந்திர நமஸ்காரம் உடலை சோர்வடையச் செய்யாமல், சமநிலைப்படுத்தும் ‘Cooling practice’. இது உடலுடன் போராடாமல், இணைந்து செயல்பட வைப்பதுடன், பெண்களுக்கு குறிப்பாக அவர்களின் ‘சக்தியை மெதுவாக எழுப்பி, அமைதியை நிலைநிறுத்துகிற சிறந்த பயிற்சி.’

செய்முறை

விரிப்பின் மீது நேராக நின்ற நிலையில் முன் பக்கத்தில் படத்தில் காட்டியிருப்பது போலவே ஆசனங்களைச் செய்ய வேண்டும்

1. திரியக தாடாசனம்
2. காளி ஆசனம்
3. திரிகோணாசனம்
4. பார்ஸ்வ உத்தானாசனம்
5. அர்த்த சந்திராசனம்
6. ஸ்கந்தாசனம்

இதே ஆசனங்களை கீழிலிருந்து மேலாய் மறு வரிசையில் செய்தல் வேண்டும்.

6. ஸ்கந்தாசனம்
5. அர்த்த சந்திராசனம்
4. பார்ஸ்வ உத்தானாசனம்
3. திரிகோணாசனம்
2. காளி ஆசனம்
1. திரியக தாடாசனம்

பயன்கள்

* உடலை அமைதியாக்கும்.

* இடுப்பு, தொடை வலிமை பெறும்.

* நெகிழ்வுத்தன்மை கூடும்.

* முதுகெலும்பு வலுப்பெறும்.

* ரத்த ஓட்டம் சீராகும்.

* உடல் சோர்வு மற்றும் களைப்பு குறையும்.

* பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தும்.

* மாதவிடயாய் நிற்றல்(Perimenopause) நேரம் ஏற்படுகிற மனநிலை மாற்றம், வயிறு உப்புசம், தசை பிடிப்பு போன்றவை குறையும்.

* மன அழுத்தத்தைக் குறைத்து, மன அமைதியை அதிகரிக்கும்.

* நன்றாக தூக்கம் வரும்.

* ஜீரண மண்டலம் மேம்படும்.

* ஹார்மோன் இன்பேலன்ஸினை சமநிலைப்படுத்தும்.

* இனப்பெருக்க உறுப்புகள், சினைப் பை, கருப்பைகளின் ரத்த ஓட்டம் சீராகும்.

(நலம் யோகம் தொடரும்…)

தொகுப்பு: ஆ.வின்சென்ட் பால்

Tags :
× RELATED பிக்கிள்பால்!