×

நலம் யோகம்!

நன்றி குங்குமம் தோழி

உடலுக்கு ஒளி… மனதுக்கு அமைதி!

சூரிய நமஸ்காரம் என்பது ஒரு முழுமையான சாதனை. இது வேத காலத்து ஞானிகள் வழியாக பரம்பரையாக வந்த பயிற்சியாகும். சூரியன் ஆன்மிக விழிப்புணர்வின் அடையாளமாய் கருதப்படுவதுடன், பண்டைய காலத்தில், சூரியன் தின வழிபாட்டுக்குரிய ஒன்றாகவும் இருந்து வந்தது. சமஸ்கிருதத்தில் ‘சூர்ய’ என்பது சூரியனை குறிக்கும். ‘நமஸ்காரம்’ என்பது வணக்கத்தை குறிக்கும். யோகத்தில், சூரியன் ‘பிங்கலை’அல்லது ‘சூர்ய நாடி’ எனவும் குறிப்பிடப்படுகிறது. இது உயிர் சக்தியான ப்ராண சக்தியை எடுத்துச் செல்லும் நாடி. இயக்கமிக்க ஆசனங்களின் தொகுப்பு, பின்னர் ஆசனங்களின் அசல் தொகுப்பிலும் இது சேர்க்கப்பட்டது.

சூரிய நமஸ்காரம் என்பது உடலின் அனைத்து மூட்டுகள், தசைகள் மற்றும் உள் அவயங்களைத் தளர்த்தி, நீட்டி, உடலினை மசாஜ் செய்து உறுதியாக்கும் மிகச்சிறந்த, பயனுள்ள முறையாகும். இதன் பல்துறை பயன்பாடு, ஆரோக்கியமான, உற்சாகமான, செயல்மிக்க வாழ்க்கையை உருவாக்க உதவுவதுடன், ஆன்மிக விழிப்புணர்வு மேலோங்கவும் உதவுகிறது. இதில் ஆசனம், பிராணாயாமம், மந்திரம் மற்றும் தியான முறைகளும் அடங்கியுள்ளன. காலை யோகப் பயிற்சியைத் தொடங்குவதற்கு இது மிகவும் சிறந்த ஆசனத் தொகுப்பாகும். சூரிய நமஸ்காரத்தை தொடர்ந்து பயிற்சி செய்வது, பிங்கல நாடி குறைவாகச் செயல்பட்டாலும் அல்லது அதிகமாகச் செயல்பட்டாலும் அதனை சமநிலைப்படுத்துகிறது.

சூரிய நமஸ்காரம் மூன்று கூறுகளால் அமைந்துள்ளது. வடிவம், சக்தி மற்றும் தாளம். பன்னிரண்டு ஆசனங்கள் இந்தப் பயிற்சியின் வடிவமைப்பை உருவாக்கும் அடிப்படை அமைப்பாக உள்ளன. இந்த ஆசனங்கள் பிராண சக்தியை உருவாக்கி உடலைச் செயல்படுத்துகிறது. இந்த ஆசனங்களை நிலையான மற்றும் ஒழுங்கான தாளத்தில் செய்வது, பிரபஞ்சத்தின் தாளத்தை பிரதிபலிக்கிறது. ஒரு நாளின் 24 மணி நேரம், ஆண்டின் 12 ராசி நிலைகள் மற்றும் உடலின் உயிரியல் தாளங்கள் ஆகியவற்றுடன் இணைந்து இயங்குகிறது. இந்த வடிவமும் தாளமும் உடல், மனம் ஒருங்கிணைப்பில் பயன்படுத்தப்படும்போது, மாற்றத்தை உருவாக்கும் சக்தியை உருவாக்குவதுடன், நிறைவான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கையை உருவாக்கவும் உதவுகிறது.

சூரிய நமஸ்கார பயிற்சிக்கான மிகச் சிறந்த நேரம் சூரியோதயம். இது மிக அமைதியான நேரமாகும். முடிந்தவரை திறந்த வெளியில், உதயமான சூரியனை நோக்கி பயிற்சி செய்தல் வேண்டும்.
சூரியாஸ்தமன நேரமும் நல்லது. இது ஜீரண சக்தியைத் தூண்டுகிறது. இருப்பினும், வயிறு காலியாக இருக்கும் எந்த நேரத்திலும் சூரிய நமஸ்காரத்தை பயிற்சி செய்யலாம்.

சூரிய நமஸ்காரம் செய்வதற்கு முன்…

பயிற்சி தொடங்கு முன், கால்களை சேர்த்தோ அல்லது சிறிது விலக்கியோ வைத்து, கைகளை உடலின் பக்கங்களில் தளர்வாக விடுதல் வேண்டும். கண்களை மெதுவாக மூடி, முழு உடலையும்
ஒருங்கிணைந்த அமைப்பாக உணர்தல் வேண்டும். இந்த நிலையில் உடல் முன்-பின் அல்லது இடது-வலதாகச் சாய்தல் கூடும். இந்த அசைவுகளை குறைத்து, உடல் எடையை இரு கால்களிலும் சமமாகப் பகிர முயற்சித்தல் வேண்டும். இது சென்டரிங் (Centering) என அழைக்கப்படும்.

கவனம் முழுவதையும் உடலின் உள் கொண்டு வந்து, மனதளவில் உடலை தளர்த்தத் தொடங்க வேண்டும். தலையின் உச்சியிலிருந்து ஆரம்பித்து, ஒவ்வொரு உடல் பகுதிக்கும் முறையாக கவனம் செலுத்தி, உள்ளிருக்கும் பதட்டத்தை இப்போது மெல்ல விடுவிக்க வேண்டும். மீண்டும் முழு உடலின் மீதுவிழிப்புணர்வை கூட்டி, அதனுடன் ஒற்றுமையை உணரத் தொடங்க வேண்டும்.

இப்போது உங்கள் கவனத்தை தரையைத் தொடும் காலடித் தளங்களுக்கு கொண்டு வரவேண்டும். முழு உடலும் ஈர்ப்பு விசையால் கீழே இழுக்கப்படுகிறது என்பதை உணரவேண்டும். உடலில் உள்ள அனைத்து பதட்டங்களும் கீழே இழுக்கப்பட்டு தரையில் இப்போது கலந்துவிடுகின்றன என்பதையும் உணர வேண்டும். அதே நேரம், பூமியிலிருந்து உயிர் சக்தி மேலே எழுந்து முழு உடலையும் நிரப்புகிறது என்றும் உணர்தல் வேண்டும்.

இறுதியாக, உங்கள் கவனத்தை புருவத்தின் மத்திய பகுதியில் கொண்டு வந்து, ஒரு பிரகாசமான சிவப்பு உதய சூரியனை கற்பனை செய்து, அந்த சூரியன் தனது உயிரூட்டும் மற்றும் குணப்படுத்தும் கதிர்களால் உடல் மற்றும் மனதை நிரப்புகிறது எனவும் உணர்தல் வேண்டும்.

இப்போது ஒவ்வொரு அசைவும் ஒன்றோடொன்று இணைந்து ஓடும் நடனமென மென்மையாகவும் ஒத்திசைவாகவும் நடைபெறுகிறது என்றும் உணர்தல் வேண்டும். சூரிய நமஸ்காரத்தில் ஒவ்வொரு ஆசனத்திற்கும் ஒரு மந்திரம் உண்டு. இவை 12 சூரிய மந்திரங்கள். இம்மந்திரங்களை ஒவ்வொரு நிலைக்கும் ஒன்றாக அல்லது முழு சுற்றிற்குப்பின் சொல்லலாம். அவை…

* ஓம் மித்ராய நமஹ
* ஓம் ரவயே நமஹ
* ஓம் சூரியாய நமஹ
* ஓம் பானவே நமஹ
* ஓம் ககாய நமஹ
* ஓம் பூஷ்ணே நமஹ
* ஓம் ஹிரண்யகர்பாய நமஹ
* ஓம் மரீசயே நமஹ
* ஓம் ஆதித்யாய நமஹ
* ஓம் சவித்ரே நமஹ
* ஓம் அர்காய நமஹ
* ஓம் பாஸ்கராய நமஹ…

யோக உலகில், சூரிய நமஸ்காரத்திற்கும் பல்வேறு வடிவங்கள் உள்ளன.

*ஹத யோக சூரிய நமஸ்காரம், மெதுவாக, சுவாசத்துடன் இணைத்து செய்யப்படும் பாரம்பரிய முறை.

* அஷ்டாங்க யோக சூரிய நமஸ்காரம், வேகமாகவும் வலிமையாகவும் செய்யப்படும், வின்யாசா அடிப்படையிலான முறை.

* வின்யாசா சூரிய நமஸ்காரம், சுவாசம் மற்றும் அசைவுகளை ஓர் ஓட்டமாக இணைக்கும் தாளமிகு பாணி.

*பீஹார் பள்ளி சூரிய நமஸ்காரம், மந்திரம், சுவாசம், தியானம் இணைந்த ஆன்மிக அணுகுமுறை.

* சிவானந்தா சூரிய நமஸ்காரம், ஒழுங்கான சுவாசம் மற்றும் மந்திரத்துடன் செய்யப்படும் பாரம்பரிய முறை.

* பவர் யோகா சூரிய நமஸ்காரம், உடல் வலிமை மற்றும் சக்தி அதிகரிக்க வேகமாகச் செய்யப்படும் முறை.

* சூரிய நமஸ்கார் (அஷ்டாங்க முறை) இரண்டு விதமான வரிசைகளில் ஒன்று அடிப்படை, மற்றொன்று கொஞ்சம் சவாலானது.

சூரிய நமஸ்காரம் ஒரே மாதிரியாக இல்லாமல், பயிற்சி முறை, வேகம், சுவாசம், ஆன்மிக அணுகுமுறை ஆகியவற்றைப் பொறுத்து பல பாணிகளில் செய்யப்படுகிறது.

அவற்றில் ஒரு பொதுவான சூரிய நமஸ்கார வரிசை பின்வரும் ஆசனங்களை கொண்டு செய்யப்படுகிறது. இது உடல், மனம், மூச்சை ஒருங்கிணைக்கும் முழுமையான பயிற்சி.

*பிரணமாசனம் (Pranamasana)
*ஹஸ்தஉத்தானாசனம் (Hastauttanasana)
*பாதஹஸ்தாசனம் (Padahastasana)
*அஷ்வசஞ்சலனாசனம் (Ashvasanchalanasana)
*த்விபாததண்டாசனம் (Dvipadadandasana)
*அஷ்டாங்க நமஸ்காரம் (Ashtanga Namaskara)
*புஜங்காசனம் (Bhujangasana)
*பர்வதாசனம் (Parvatasana)


Tags : Surya Namaskar ,
× RELATED முதுமை: உடல் மாற்றங்களும் மருத்துவ அணுகுமுறைகளும்!