×

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வாளால் கேக் வெட்டிய தவெக எம்எல்ஏ: நெட்டிசன்கள் கண்டனம்

சென்னை: சென்னை ராயபுரம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள தவெக சட்டமன்ற உறுப்பினர் தாமு, தனது பிறந்த நாள் விழாவில், வாளால் கேக் வெட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில், சென்னை ராயபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட தாமு, வெற்றி பெற்றுள்ளார். ஆட்டோ ஓட்டுனர் என்ற அடையாளத்துடன் தேர்தலில் போட்டியிட்டு எளிய மக்களின் ஆதரவை பெற்ற இவர், நேற்று தனது பிறந்தநாளை முன்னிட்டு ராயபுரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பிரம்மாண்ட கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

நிகழ்ச்சியில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர். அப்போது, தொண்டர்களின் உற்சாகத்திற்கு மத்தியில் எம்எல்ஏ தாமு, சுமார் இரண்டடி நீளமுள்ள வாளைக் கொண்டு கேக் வெட்டி, தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் சமீபகாலமாக ‘ரீல்ஸ்’ மோகத்தினால் இளைஞர்கள் மற்றும் ரவுடிகள் பட்டாக்கத்தி, வீச்சரிவாள் போன்ற ஆயுதங்களைக் கொண்டு கேக் வெட்டி வரும் கலாச்சாரம் அதிகரித்து வந்தது. இதனைத் தடுக்கும் வகையில், இவ்வாறு ஆயுதங்களை கொண்டு கேக் வெட்டுபவர்களை போலீசார் கைது செய்து, நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், ஒரு மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள நபர், சட்டத்தையும், காவல்துறையின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் இவ்வாறு நடந்து கொண்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பேன் என்று வாக்குறுதி அளித்து வெற்றி பெற்ற இரண்டே நாளில், அராஜக போக்கை வெளிப்படுத்தும் வகையில் ஆயுதத்தை கொண்டு கேக் வெட்டியது சமூக ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது வரை காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Tags : MLA ,Chennai ,Daweka ,Assemblyman ,Damu ,Rajapuram ,Tamil Nadu Assembly ,Daveka ,Chennai Raipuram ,
× RELATED தர்மபுரி அருகே பயங்கரம்; காதல்...