குன்றத்தூர், மே 6: துரு துருவென சேட்டை செய்த 6 வயது மகனை கழுத்து நெரித்து கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி பள்ளத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் வீரச்செல்வன்(35). இவரது மனைவி சிவரஞ்சனி(27). சிவரஞ்சனிக்கு வீரச்செல்வன் இரண்டாவது கணவராவார். இவர்களுக்கு ஆறு வயதில் கிருஷ்ணன் என்ற மகனும் ஒன்பது மாதத்தில் மித்ரன் என்ற குழந்தையும் இருந்தது. வீரச்செல்வன் மின்ட் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 3ம் தேதி இரவு அனைவரும் வழக்கம்போல் வீட்டில் தூங்கினர். மறுநாள் காலை 6 மணியளவில் சிவரஞ்சனி தனது மகன் கிருஷ்ணனை எழுப்பிய போது சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளார். உடனே சிவரஞ்சனி மொட்டை மாடியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த தனது கணவர் வீரச்செல்வனை அழைத்து ஆட்டோ மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனை கொண்டு சென்று காண்பித்த போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து கிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவரஞ்சனி கதறி அழுதுள்ளார்.
இது குறித்த தகவல் அறிந்த வியாசர்பாடி போலீசார் மருத்துவமனைக்குச் சென்று உயிரிழந்த கிருஷ்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், கிருஷ்ணனின் கழுத்தில் சிறிய காயம் இருந்தது தெரியவந்தது.
சிவரஞ்சனியின் முதல் கணவருக்கு பிறந்தவர் கிருஷ்ணன் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் குழந்தை கிருஷ்ணன் வீட்டில் சோபாவில் படுத்து இருக்கும் போது கீழே விழுந்ததால் லேசாக தலையில் காயம் ஏற்பட்டது என குழந்தையின் தாய் சிவரஞ்சனி வியாசர்பாடி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. வியாசர்பாடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜ் பிரபு தலைமையிலான போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பிரியதர்ஷினி தலைமையிலான குழுவினர் பிரேத பரிசோதனை செய்ததில் இயற்கைக்கு மாறாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இதனை யடுத்து போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிவரஞ்சனி அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது: ‘கிருஷ்ணன் சிறுவயதில் இருந்து துரு துரு என்று இருப்பான். இது போன்ற குழந்தைகளை ஹைப்பர் ஆக்டிவிட்டி குழந்தைகள் என கூறுவர். பள்ளிக்கு செல்லும்போது அங்கு சக மானவர்களை அடிப்பது என மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டான். ஆனால் குழந்தைக்கு எந்த வித சிகிச்சையும் அளிக்கவில்லை. இதனால் அவனை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்திவிட்டோம்.
மேலும், சம்பவத்தன்று கிருஷ்ணனின் தனது தம்பியான மித்ரனின் கழுத்தில் இருந்த சாமி கயிற்றை பிடித்து இறுக்கி விளையாடினான். அபோது குழந்தை மித்திரன் அழுதான். உடனே, நான் கழுத்தை இறுக்கி விளையாடினால் என்ன ஆகும் தெரியுமா? எனக் கேட்டு துப்பட்டாவால் கிருஷ்ணனின் கழுத்தை இறுக்கியபோது, திடீரென்று கிருஷ்ணன் மயங்கினான். குழந்தை தூங்குகிறது என அவர் நினைத்துக் கொண்டேன். மறுநாள் காலையில எழுந்து பார்த்தபோது குழந்தை சுயநினைவு இல்லாமல் இருந்தால் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு கிருஷ்ணன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். எனது குழந்தையை வேண்டும், என்று கொலை செய்யவில்லை. மற்றவர்களின் வலி அவனுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக அப்படி செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து இறந்த கிருஷ்ணன் தாயார் சிவரஞ்சனி மீது போலீசார் கொலை வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் வியாசர்பாடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
