×

ராக்கெட் லாஞ்சர் வெடித்து மாணவர் உயிரிழந்த பகுதியில் வெடிக்காமல் சிதறி கிடந்த வெடிபொருட்கள் கண்டெடுப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அடுத்த அனுமந்தபுரம் வனப்பகுதியில் ராணுவ துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. இங்கு இந்திய ராணுவ வீரர்கள், துணை ராணுவப்படை, ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கு சுழற்சி முறையில் துப்பாக்கி சுடுதல், சிறிய ரக ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இங்கு வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடும்போது வனப்பகுதி மற்றும் மலைகளில் குண்டுகள் சிதறி விழுகின்றன. இதில் சில குண்டுகள் வெடிக்காமலும் இருக்கும். இந்நிலையில் கடந்த 14ம் தேதி மறைமலைநகர் அடுத்த பொத்தேரி பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வந்த உத்திரபிரதேச மாணவர்கள் 6 பேர் அனுமதியின்றி மலையேற்றத்தில் ஈடுபட்டபோது அங்கு வெடிக்காமல் இருந்த குண்டுகளை எடுத்து விளையாடியதில், எதிர்பாராத விதமாக அங்கிருந்த ராக்கெட் லாஞ்சர் வெடித்தது. இதில் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் உயிரிழந்தார், அவரது நண்பர் ஒருவர் படுகாயமடைந்தார்.

இந்நிலையில், கடந்த 16ம் தேதி சம்பவம் நடைபெற்ற பகுதியை தடயவியல் நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சேர்ந்து தடயங்கள் மற்றும் மாதிரிகளை சேகரித்து சென்றனர். இச்சம்பவம் குறித்து சிங்க பெருமாள்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து ராணுவ பயிற்சி அதிகாரிகளுக்கு கடிதம் வாயிலாக இந்த துப்பாக்கி சுடும் பயிற்சி பகுதியை சுற்றி சிதறிக் கிடக்கும் குண்டுகள் மற்றும் வெடிபொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கடந்த 19ம் தேதி சென்னையில் இருந்து ராணுவ போலீசார் 15க்கும் மேற்பட்டோர் 6 குழுக்களாக பிரிந்து இந்த பகுதியில் சோதனை நடத்தி பல்வேறு பகுதிகளில் வெடிக்காமல் சிதறிக்கிடந்த 30க்கும் மேற்பட்ட வெடிபொருட்களை கண்டுபிடித்து தொடந்து அவற்றை பாதுகாப்பாக கைப்பற்றி அதே பகுதியில் வெடிக்க வைத்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து நேற்று முன்தினம் மீண்டும் 10க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் அனுமந்தபுரம் வனப்பகுதியில் சோதனை நடத்தி வெடிக்காமல் சிதறிக்கிடந்த 6 வெடி குண்டுகளை கைப்பற்றி அதே பகுதியில் வெடிக்க வைத்து செயலிழக்கச் செய்தனர்.

Tags : Chengalpattu ,Anumanthapuram ,Singaperumalkoil ,Indian Army ,Railway Protection Force ,
× RELATED மதுபோதை தகராறில் விபரீதம் தலையில்...