×

சட்டப்பேரவை தேர்தல் முடிவை தொடர்ந்து முதல்வர் பதவியை மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்தார்: அடுத்த அரசு அமையும் வரை முதல்வராக தொடர ஆளுநர் வேண்டுகோள்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் முடிவை அடுத்து முதல்வர் பதவியை மு.க.ஸ்டாலின் நேற்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் கடந்த மாதம் 23ம் தேதி நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்ட 73 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணிக்கு 53 இடங்கள் கிடைத்துள்ளன. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்பதால் அதிமுக, திமுக ஆட்சி அமைக்க முடியாது. தவெக 233 தொகுதிகளில் போட்டியிட்டு 108 இடங்களில் வென்றுள்ளது. ஆனால் பெரும்பான்மை இல்லாததால் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் ஆட்சி அமைக்க விஜய் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை நேற்று காலை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினின் ராஜினாமாவை தமிழக ஆளுநர் ஏற்றுக் கொண்டார். அடுத்த அரசு அமையும் வரை மு.க.ஸ்டாலின் முதல்வராக தொடருமாறும் ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

முதல்வர் பதவியை மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ததையடுத்து, தனது சமூக வலைதள பதிவில் முதல்வர் என்ற பதிவை நீக்கினார். திமுக தலைவர் என்று மட்டும் இடம் பெற்றுள்ளது. இதற்கிடையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணி கட்சியினர் பேசினர்.
அதாவது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்து பேசினர். கூட்டணியில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களும் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர்.

Tags : MK Stalin ,Governor ,Minister ,Chennai ,Chief Minister ,Tamil Nadu assembly ,Tamil Nadu assembly elections ,
× RELATED தமிழ்நாட்டு மக்களுக்கு வாழ்நாள்...