×

கார்கூந்தல் பெண் அழகு!

நன்றி குங்குமம் டாக்டர்

பெண்கள் பொதுவாகவே தங்கள் அழகு விஷயத்தில் ஆர்வமுடன் இருப்பார்கள். அதிலும் குறிப்பாக, கூந்தல் மீது தனி கவனத்துடன் இருப்பார்கள். அத்தகைய கூந்தல் கருமையாகவும், நீண்டும் வளர தெரிந்து கொள்ள வேண்டிய பராமரிப்புகளை பார்ப்போம்.கூந்தல் பராமரிப்பில் முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியது. உணவு முறையே. அந்தவகையில், கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்துவிட்டு, ஆரோக்கியமான உணவுவகைகளை கடைப்பிடிக்க வேண்டும். உதாரணமாக, நெய், வெண்ணெய், பருப்பு வகைகள், நட்ஸ் வகைகள், கோதுமை உணவு, கீரை வகைகள், வேர்கடலை, மீன் வகைகள், நெல்லிக்காய், கறிவேப்பிலை போன்றவை கூந்தல் வளர்ச்சிக்கு துணை நிற்கும்.

அடுத்ததாக, கடைப்பிடிக்க வேண்டியது, கண்ட கண்ட விளம்பரங்களில் வரும் ரசாயனம் கலந்த கூந்தல் தயாரிப்புகள் பயன்படுத்துவதை முதலில் நிறுத்த வேண்டும். அப்படி பயன்படுத்துவதால், பக்க விளைவுகள் ஏற்பட்டு முடியின் வேர்கால்கள் பலவீனம் அடைந்து கூந்தல் உதிர தொடங்குகிறது. கூந்தலை சரியாக பராமரிக்க தவறும்போது, புல்லுருவிபோல் பொடுகு வந்து புகுந்து கூந்தல் வளர்ச்சியை தடை செய்கிறது.

செய்யவேண்டியவை

தினமும் குளிர்ந்த நீரில் தலைக்கு குளிப்பது நல்லது. தினமும் தலை குளிக்க முடியாத பெண்கள், வாரத்திற்கு இரண்டு நாளாவது நல்ல நீரில் குளித்தாலே போதும். குளிக்கும்போது முடிந்த வரை சோப்பைத் தலைக்குப் போடுவதைத் தவிர்த்துவிட்டு, இயற்கைப் பொடிகளைப் பயன்படுத்துதல் கூந்தலுக்கு நல்லது. குறிப்பாக, ஷாம்பூவிற்குப் பதிலாக சீகைக்காய்தூளைப் பயன்படுத்துவது வளமான கூந்தலுக்கு நல்லது.

தலை சீவ பயன்படுத்தும் சீப்பைக் கவனமாக உபயோகப்படுத்த வேண்டும். சீப்பின் பற்கள் நெருக்கமாக இல்லாது இருந்தால் நல்லது. நெருக்கமாக உள்ள சீப்பினைப் பயன்படுத்தினால், முடிகள் பிளவுபட வாய்ப்புண்டு. வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் சீப்புகள் தனித்தனியே இருப்பது சிறந்தது.

அதுபோன்று கூந்தலை இறுக்கமாக பின்னி, சடை போடக்கூடாது. கூந்தல் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே, இலேசாகவே பின்னலிட வேண்டும். அதனினும் சிறந்தது. வீட்டில் இருக்கும்போது அள்ளி முடித்துக் கொள்ளலாம். கொண்டைப் போட்டுக் கொள்ளலாம்.அடுத்ததாக, பெண்கள் கூந்தலுக்குப் பயன்படுத்தும் எண்ணெயில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஒருவாரம் நல்லெண்ணெய், மறு வாரம் தேங்காய் எண்ணெய் என்று மாற்றி மாற்றித் தேய்க்கக் கூடாது. தேங்காய் எண்ணெயே சிறந்தது. அதிலும் சிறந்தது இயற்கை மூலிகைகளால் செய்யப்பட்ட எண்ணெய் மிகவும் நல்லது. இந்த எண்ணெய் கூந்தல் வளர்ச்சிக்கு மட்டும் முன்னிற்பது இல்லை. உடலில் உள்ள சூட்டையும் தணிக்கும்.

இன்றைய பெண்கள் தலைக்கு எண்ணெய் தடவுவதையே மறந்துவிட்டார்கள். இதனால், முடியின் வேர்கால்கள், ஈரப்பதத்தை இழந்து வறண்டு, வலுவிழந்து முடிகள் உடைந்து போகிறது.சிலர் கூந்தலுக்கு மட்டுமே எண்ணெய் தடவுவார்கள். இதுவும் தவறானது. முதலில் முடியின் வேர்க்கால்களில் விரல் நுனிகளால் எண்ணெயைத் தொட்டு இதமாகப் பூச வேண்டும். பின்னர், படிப்படியாக முடியின் நுனி வரை லேசாகத் தடவ வேண்டும். எண்ணெய் முடியின் வேர்கால்களில் நன்கு பட்டால்தான் வளர்ச்சி பெருகும்.

முடி உதிர்வை தடுக்கும் எண்ணெய் நல்லெண்ணெய் ஒரு லிட்டர், கரிசலாங்கண்ணிச் சாறு ஒரு லிட்டர், நெல்லிக்காய்ச் சாறு ஒரு லிட்டர், பசுவின் பால் நாலு லிட்டர், அதிமதுரத்தூள் அறுபது கிராம், பச்சை நெல்லிக்காய் கிடைக்கும் காலத்தில் அதையும் இடித்துச் சாறு பிழிந்து கொள்ளவும். பச்சை நெல்லிக்காய் கிடைக்காத காலத்தில், நல்ல நெல்லி முள்ளியை வாங்கி விதை அகற்றிய பின் 250 கிராம் எடுத்துப் பெருந்தூளாக இடித்து, ஒன்றே முக்கால் லிட்டர் சுடுநீரில் முதல்நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் நன்கு கசக்கிப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.அதிமதுரத்தை இடித்து தூளாக்கி சிறிதளவு பசுவின் பாலில் 4 மணி நேரம் ஊறவிட்டு பின்னர், மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பெரிய இரும்பு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடேறியதும் அதில் அதிமதுரக் கலவை, சாறு வகைகள், பசுவின் பால் சிறிது சிறிதாக இட்ட காய்ச்ச வேண்டும், சாறுகளில் உள்ள ஈரப்பதம் அடங்கும் வரை அடிபிடிக்காமல், நன்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். எண்ணெயில் சேர்த்த கலவைகள் நன்கு மொறு மொறுவென்று வந்த பின் எண்ணெயை இறக்கி ஆற வைத்து ஒரு பாத்திரத்தில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை தினசரி தடவி வர, முடி உதிர்தல், பொடுகு போன்றவை நீங்கி கூந்தல் அடர்த்தியாகவும், அழகாகவும் நீண்டு கருமையாக வளரும்.

Tags : Garkunthal ,Dr. Women ,
× RELATED மூட்டு வலியின் நிவாரணியாக செயல்படும் ஆக்வா தெரபி!