×

நீலகிரியில் அமலான ஒரு வழிப்பாதை திட்டம் வெறிச்சோடிய சாலைகளால் வியாபாரிகள் பாதிப்பு

குன்னூர் : நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகையாலும், அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் மே 1ம் தேதியான நேற்று முதல் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால், இந்த ஒரு வழிப்பாதை மாற்றம் மலைப்பாதையை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அறிவிப்பின்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக உதகை செல்லும் வாகனங்கள், காட்டேரி சந்திப்பு பகுதியில் இருந்து திருப்பி விடப்படுகின்றன.

இவை கெந்தளா, கேத்தி பாலடா மற்றும் கொல்லிமலை வழியாக உதகை சென்றடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் உதகையிலிருந்து சமவெளிப் பகுதிக்குச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கோத்தகிரி சாலை வழியாகவே இயக்கப்படுகின்றன. இந்த திடீர் மாற்றத்தால் வழக்கமாகச் சுற்றுலாப் பயணிகளால் பரபரப்பாகக் காணப்படும்.

குன்னூர் மலைப்பாதை தற்போது மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. குறிப்பாக, காட்டேரி பூங்கா முதல் குன்னூர் வரையிலான சாலைகளில் வாகன போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. மலைப்பாதையில் இயங்கி வரும் அரசு சார்ந்த இன்ட்கோ தேநீர் உணவகங்கள், தனியார் பேக்கரிகள் மற்றும் பழக்கடைகள் போதிய வாடிக்கையாளர்கள் இன்றி மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது அவசியம் என்றாலும், மலைப்பாதையைச் சார்ந்து வாழும் உள்ளூர் மக்களின் பொருளாதாரத்தைப் பாதிக்காத வகையில் மாற்றுத்திட்டங்களை மாவட்ட நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Nilgiris ,Coonoor ,
× RELATED கார் விபத்தில் சிக்கியது முதியவர் உயிரிழப்பு