திருத்தணி: கே.ஜி.கண்டிகையில் சாலையோரத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். திருத்தணி அருகே, கே.ஜி.கண்டிகையில் சாலையோரத்தில் கோழி, ஆட்டு இறைச்சி கடைகள் வைத்து விற்பனை நடைபெற்று வருகிறது. இறைச்சி விற்பனை செய்யும் வியாபாரிகள் கோழி மற்றும் ஆட்டு கழிவுகளை நொச்சிலி மாவட்ட முதன்மை சாலைக்கு இருபுறமும் கொட்டுகின்றனர்.
பள்ளி, மின்வாரிய அலுவலகம், டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ள பகுதி என்பதால் ஏராளமானோர் அவ்வழியாக சென்று வருகின்றனர். தொடர்ச்சியாக, கோழி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசிவருகிறது. இதனால், அவ்வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர், மூக்கை மூடிக்கொண்டு சாலையை கடந்து செல்கின்றனர்.
குறிப்பாக, அப்பகுதியில் வசித்து வரும் குடும்பத்தினர் துர்நாற்றத்தால் அவதி அடைகின்றனர். அதிகளவில் கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடைக்காரர்களிடம் சுங்க கட்டணம் வசூல் செய்து வரும் ஊராட்சி நிர்வாகம் சுகாதார சீர்கேடு குறித்து புகார் செய்தும் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும், சாலையோரத்தில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
