×

தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்வு மாணவர் சேர்க்கையில் அசத்தும் சென்ைன மாநகராட்சி பள்ளிகள்

சென்னை, மே 1: தனியார் பள்ளிகளுக்கு இணையாக சென்னை மாநகராட்சி பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக இதுவரை மட்டும் 5,000 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மே மாதத்துக்குள் மாணவர் சேர்க்கையை 7 ஆயிரமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு முடிவுற்று பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுளளது. மீண்டும் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடந்து முடிந்து மே 4ம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கிடையே தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள், தற்போது மாணவர் சேர்க்கையில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக, சென்னையில் தனியார் மற்றும் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேரும் மாணவர் சேர்க்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு கல்வியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிக கவனம் செலுத்தி வந்தார். இதனால் சென்னை மாநகராட்சி பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளியா.. என்று ஒரு கனம் யோசித்த பெற்றோர்கள், இப்போது சென்னை மாநகராட்சி பள்ளிகளை தேடி சென்று அட்மிஷன் போடும் அளவுக்கு அதன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன் அடிப்படையில், ஆம் ஆத்மி ஆட்சியின் போது டெல்லி சென்ற அவர் அங்கு அமைக்கப்பட்டுள்ள மாடல் பள்ளிகளை ஆய்வு செய்தார். அதேபோல, தமிழ்நாட்டிலும் செயல்படுத்தும் பணிகளை முடுக்கிவிட்டார். அதன்படி, சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகளில் டிஜிட்டல் முறையிலான வகுப்பறைகள் அமைத்தல், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் எதிரொலியாக இன்று சென்னை மாநகராட்சி பள்ளிகள் ‘சிட்டீஸ்’ மற்றும் ‘நமக்கு நாமே’ திட்டங்களின் கீழ் பிரான்ஸ் நாட்டு உதவியுடன் சர்வதேச தரத்தில் நவீனமயமாகி வருகின்றன. ஸ்மார்ட் வகுப்பறைகள், எல்.இ.டி டிவி, இணைய வசதி, நவீன கழிப்பறைகள் மற்றும் விளையாட்டு மைதானங்களுடன் கூடிய உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு, தனியார் பள்ளிக்கு நிகராக வண்ணமயமான ஓவியங்களுடன் மாற்றப்பட்டுள்ளன. இந்த தொழில்நுட்ப மேம்பாடு, மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் உள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலம், ஆசிரியர்கள் நவீன கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்குப் பாடங்களை எளிதாகவும், சுவாரஸ்யமாகவும் கற்பித்து வருகின்றனர். இது மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த உதவும் வகையில் உள்ளது.

இதன் எதிரொலியாக பலர் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்புகின்றனர். மேலும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில், பொதுமக்கள் மத்தியில் வீடு வீடாக சென்று விழிப்புணர்களை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, இதுவரையில் சுமார் 5000க்கும் மேற்பட்ட புதிய மாணவ, மாணவிகள் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். வரும் வாரங்களில் இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க மாநகராட்சி அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தரம் உயர்த்தப்பட்ட சென்னை மாநகராட்சி பள்ளிகளால் இன்று மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏப்ரல் மாதத்தின் 3வது வாரம் வரையில் மாநகராட்சிப் பள்ளிகள் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. மேலும் இந்த மாத இறுதிக்குள் சேர்க்கை எண்ணிக்கை 6 ஆயிரத்தை எட்டும். அத்துடன் மே மாதத்துக்குள் இது 7 ஆயிரம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கையைவிட இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் வரை சென்னை மாநகராட்சி நிர்வாகம் தனது பள்ளிகளில் 13 ஆயிரத்து 800 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கையை கடந்து மாணவர் சேர்க்கை இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மாணவர் சேர்க்கை அதிகரிப்பு ஒருபுறம் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் 100 சதவீத தேர்ச்சியை ஏற்படுத்தும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் தொடங்கியுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Chennai Municipal Schools ,Chennai ,municipal ,Tamil Nadu ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையங்களில்...