×

கடும் கோடை – சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதா? அதிகாரிகள் விளக்கம்

சென்னை: தலைநகர் சென்னைக்கு குடிநீர் வழங்க முக்கிய ஆதாரங்களாக இருக்கும் 5 ஏரிகளில் தண்ணீர் இருப்பு சராசரியாக சுமார் 67 சதவீதம் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கொளுத்தும் கோடை வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் சென்னையில் இந்த ஆண்டு கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

இந்த சூழலில் குடிநீர் வழங்க முக்கிய ஆதாரங்களாக இருக்கும் நீர் நிலைகளில் இருக்கும் இருப்பை சுட்டிக்காட்டி பேசி இருக்கும் குடிநீர் வாரிய அதிகாரிகள், இந்த ஆண்டு கோடை காலத்தில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை என்று குறிப்பிட்டு உள்ளனர்.

தலைநகர் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல், கண்ணகோட்டை ஆகிய ஐந்தின் மொத்த கொள்ளளவு சுமார் 11,757 மில்லியன் கன அடி ஆகும். இந்த 5 ஏரிகளிலும் தற்போது 7,919 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. அதாவது மொத்த கொள்ளளவில் சுமார் 67 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது. தற்போது குடிநீர் ஏரிகளில் சுமார் 9 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ள நிலையில், வழக்கமாக சென்னை நகரில் ஒரு மாதத்திற்கு 1 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும்.

ஏரிகளில் நீர்மட்டம் சீராக இருப்பதால் கோடை முழுவதும் சென்னைக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும். வெயில் காரணமாக ஏரிகளின் நீர்மட்டம் சற்று சரிந்தாலும், தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு குறையவில்லை. தற்போதைய நிலவரப்படி கையிருப்பில் தண்ணீர் கோடையை சமாளிக்க போதுமானது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே எப்படி பார்த்தாலும் தற்போது மேற்கண்ட 5 ஏரிகளில் உள்ள தண்ணீரை வைத்து இந்த கோடை காலம் முழுவதும் தட்டுப்பாடின்றி சென்னை மக்களுக்கு குடிநீர் வினியோகிக்க முடியும். தவிர சென்னையில் செயல்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் மூன்று சுத்திகரிப்பு நிலையங்களின் மூலமாகவும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே இந்த ஆண்டு கோடைகாலத்தில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.

Tags : Chennai ,
× RELATED திருவிக நகர் அதிமுக வேட்பாளர்...