- ஆந்திரப் பிரதேசம்
- சென்னை உயர் நீதிமன்றம்
- சென்னை
- தமிழரசன்
- ராஜேஷ் குமார்
- Meenjur
- கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு
- ஏலவுரில்
சென்னை: மீஞ்சூர் பகுதியை சேர்ந்த தமிழரசன் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஆந்திர மாநிலத்திலிருந்து 3.4 லிட்டர் மதுபானத்தை விற்பனைக்காக கொண்டு வந்ததாக எளாவூர் சோதனைச் சாவடியில், கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் எங்கள்மீது வழக்கு பதிவு செய்தனர். தமிழ்நாடு அரசாணையின் படி 4.5 லிட்டர் வரை மதுபானத்தை தனிநபர் பயன்பாட்டிற்காக வைத்திருக்கலாம். நாங்கள் கொண்டு வந்த மதுபானம் எங்களின் சொந்த பயன்பாட்டிற்காகத்தான்.
எனவே, எங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்றம், புலன் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், தமிழக அரசின் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னாவின் முறையீட்டின் பேரில் இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு இறுதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர்கள் அனுமதிக்கப்பட்ட அரசாணையின் படி 3.4 லிட்டர் மட்டுமே கொண்டு வந்தனர். நீதிமன்றத்தின் முன்தீர்ப்புகள் மற்றும் 4.5 லிட்டர் தனிப்பயன்பாட்டு விலக்கு அடிப்படையில் இந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா, 4.5 லிட்டர் விலக்கு அரசாணை என்பது தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் மதுபானங்களுக்கு எந்த வகையிலும் பொருந்தாது. இதற்கான விளக்கங்களை உள்துறை செயலாளர் ஏற்கனவே வெளியிட்டுள்ளார். முந்தைய தீர்ப்புகள் இந்த அம்சத்தை கருத்தில் கொள்ளாமல் வழங்கப்பட்டுள்ளது. அவை இவ்வழக்கிற்கு பொருந்தாது.
புதுச்சேரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு 4.5 லிட்டர் வரை மதுபானம் கொண்டு வரலாம் என்று உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக சமூக ஊடகங்களில் தவறாக தகவல்கள் பரவியுள்ளது, என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 4.5 லிட்டர் தனிப்பயன்பாட்டு விலக்கு அரசாணை என்பது தமிழ்நாட்டில் சட்டபூர்வமாக விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனத் தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தார்.
