×

சென்னை வர்த்தக மையத்தில் அக்.1 முதல் 3ம் தேதி வரை ‘உணவு எக்ஸ்போ-2026’: தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: சென்னை வர்த்தக மையத்தில் வரும் அக்டோபர் 1ம்தேதி முதல் 3ம் தேதி வரை 3 நாட்கள் ‘உணவு எக்ஸ்போ-2026’ கண்காட்சி நடத்துவதாக தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது. சென்னை வர்த்தக மையத்தில் உணவு எக்ஸ்போ-2026 கண்காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் எம்.வெங்கடசுப்பு, கவுரவ தலைவர்கள் டி.சீனிவாசன், எம்.ரவி, கே.டி.சீனிவாசராஜா, செயலாளர் ஆர்.சீனிவாசன், சினெர்ஜி எக்ஸ்போசர்ஸ் இயக்குனர் பிரிஜேஷ் எட்வர்ட்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் 84 ஆண்டுகளை கடந்த பாரம்பரியமிக்க தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் 1,00,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களையும், 5,00,000க்கும் அதிகமான வணிக நிறுவனங்களையும் (5 நட்சத்திரம் முதல் பட்ஜெட் ஓட்டல்கள் வரை), அனைத்து வகை உணவகங்கள், பேக்கரிகள், கபேக்கள் மற்றும் க்யூஎஸ்ஆர்கள் பிரதிநிதித்துவப்படுத்தி, தென் இந்தியாவின் உணவு மற்றும் விருந்தோம்பல் துறைக்கான, மிகப்பெரிய பி2பி வணிக தளமான உணவு எக்ஸ்போ-2026 (UNAVU EXPO- 2026)ஐ வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை 3 நாட்கள் சென்னை வர்த்தக மைய வளாகத்தில் நடத்துவது என அறிவிக்கப்பட்டது. மேலும் இந்திய ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தென் இந்திய ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் உணவு எக்ஸ்போ-2026 கண்காட்சியின் லோகோவும் வெளியிடப்பட்டது.
இந்த கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 500க்கும் மேற்பட்ட பிராண்டுகள் பங்கேற்கின்றன.

இந்தியா முழுவதும் இருந்து 15,000க்கும் மேற்பட்ட வணிக பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உணவு எக்ஸ்போ-2026ல் ஓட்டல்கள், உணவகங்கள், பேக்கரிகள், கபேக்கள் உள்ளிட்ட துறைகளின் பங்குதாரர்கள் ஒன்றுகூடி தொழில் போக்குகள், கொள்கைகள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து விவாதிக்கவுள்ளனர். உணவகத்துறையின் முன்னோடியான டாக்டர் கே.தாமோதரசுவாமி, தனது தொலைநோக்கு பார்வையால் தமிழக உணவகத் துறையை மாற்றினார். ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கவுரிசங்கர் பிராண்டை உருவாக்கி தரம் மற்றும் சுத்தத்தில் புதிய அளவுகோல்கள் அமைத்தார். பல புதுமைகளை அறிமுகப்படுத்திய அவரை நினைவுகூர்ந்து உணவு எக்ஸ்போ-2026ல் அக்டோபர் 3ம் தேதி மாலை ‘உணவக தினம்’ கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Food Expo-2026 ,Chennai Trade Centre ,Tamil Nadu Hotels Association ,Chennai ,Chennai Trade Centre… ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் வெப்பத்தில்...