×

கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மளிகை கடையில் திடீர் தீ விபத்து: ரூ.20 லட்சம் பொருட்கள் நாசம்

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் கோவில்மணி (45) என்பவர் மொத்த வியாபார மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கடையில் வேலை செய்யும் தொழிலாளர்கள், கடையின் மேல் தளத்தில் தங்கி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவில்மணி வழக்கம்போல் வியாபாரம் முடிந்த பின்னர் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பிறகு நள்ளிரவில் திடீரென அவரது கடையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்படவே மேல் தளத்தில் இருந்த பணியாளர்கள் வெளியில் வந்து பார்த்தபோது கடை தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ வேகமாக பரவி மளமளவென எரிய தொடங்கியது.

இதையடுத்து அவர்கள் கடையின் உரிமையாளர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோயம்பேடு மற்றும் ஜே.ஜே.நகர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் கடையில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் தீயில் கருகி நாசமானது. இதுகுறித்த புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிய வருகிறது. இருந்தபோதும் இந்த தீ விபத்து தற்செயலாக நடந்ததா அல்லது வேறு யாராவது கடைக்கு தீ வைத்து சென்றார்களா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Tags : Koyambedu ,Annanagar ,Kovilmani ,Chennai ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் வெப்பத்தில்...