கராச்சி: பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் கராச்சியில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயுவை பிளாஸ்டிக் பலூன்களில் சேமித்து வைக்கும் ஆபத்தான முறையை கையாண்டு வருகிறார்கள். கராச்சியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் பைப் லைன்களில் கிடைக்கும் குறைந்த அழுத்தம் கொண்ட சமையல் எரிவாயுவை, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பிளாஸ்டிக் பலூன்களில் சேமித்து பின்னர் அடுப்புக்கு பயன்படுத்துகின்றனர்.
அந்த நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்பில் ஏற்பட்டு உள்ள குறிப்பிடத்தக்க சவால்கள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை காரணமாக, பல்வேறு பகுதிகளில் மக்கள் இந்த நடைமுறையில் சமையல் எரிவாயுவை சேமித்து வருகிறார்கள். நீண்டகால எரிவாயு பற்றாக்குறையால் அன்றாட வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால், கராச்சியின் சில பகுதிகளில் வசிப்பவர்கள் பிளாஸ்டிக் பலூன்களில் எரிவாயுவை சேமித்து வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கவலைக்குரிய பழக்கம், குறிப்பாக கராச்சியின் ஒராங்கி டவுன் பகுதியிலும், மோமினாபாத் உள்ளிட்ட இடங்களிலும் மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. சீரற்ற எரிவாயு விநியோகத்தால் தங்களுக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். சீரற்ற விநியோகத்தால் பல குடும்பங்கள் அடிப்படை அன்றாடப் பணிகளைச் செய்வதற்கே சிரமப்படுவதாகவும், இது போன்ற வழக்கத்திற்கு மாறான மற்றும் அபாயகரமான மாற்று வழிகளைக் கையாள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனினும் பிளாஸ்டிக் பலூன்களில் எரிவாயுவைச் சேமிப்பது கடுமையான அபாயங்களை ஏற்படுத்தும் என்று எச்சரித்து, இந்த நடைமுறை குறித்து நிபுணர்கள் கடும் பாதுகாப்பு கவலைகளை எழுப்பியுள்ளனர். கராச்சி மக்கள் எரிவாயுவை சேமிக்க பயன்படுத்தும் பலூன்களை “நகரும் வெடிகுண்டு” (mobile bomb) என்று குறிப்பிட்டு சிறிய உராய்வு, வெப்பத் தாக்கம் அல்லது ஒரு தீப்பொறி கூட வெடிப்பை தூண்டி, அதிக மக்கள் அடர்த்தி கொண்ட குடியிருப்புப் பகுதிகளில் பேரழிவு ஏற்பட வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளனர். பாகிஸ்தான் எரிவாயு குழாய் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ள சில கடைகளில் இந்த கேஸ் சட்டவிரோதமாக நிரப்பப்படுகிறது. சில பகுதிகளில், மக்கள் பிரதான எரிவாயு குழாய்களில் (Main supply lines) துளையிட்டு அல்லது ஹோஸ் குழாய்கள் மூலம் தாங்களாகவே நேரடியாகப் பலூன்களில் நிரப்பிக் கொள்கிறார்கள்.
பலூன்களில் எடுத்து செல்லும் சமையல் எரிவாயுவை அடுப்பில் எப்படி பயன்படுத்துகிறார்கள்?
எரிவாயு சேமிக்கப்பட்ட பெரிய பிளாஸ்டிக் பலூனின் முனையில் ஒரு சிறிய வால்வு அல்லது குழாய் இணைக்கப்பட்டிருக்கும். பலூனில் இருக்கும் கேஸ் தானாக அடுப்புக்குச் செல்லும் அளவுக்கு அழுத்தம் இருக்காது என்பதால் பலூனுக்கும் அடுப்புக்கும் இடையே ஒரு சிறிய மின்சார பம்பை (Suction Pump) இணைக்கிறார்கள். சமைக்க வேண்டிய நேரத்தில், அந்த மின்சார பம்பை ஆன் செய்வார்கள். அது பலூனுக்குள் இருக்கும் கேஸை வலுவாக உறிஞ்சி, குழாய் வழியாகச் சமையல் அடுப்புக்குத் தள்ளும். பம்ப் மூலம் கேஸ் அடுப்புக்கு வந்தவுடன், சாதாரண அடுப்பைப் போலவே தீயைப் பற்ற வைத்துச் சமைக்கிறார்கள்.
சாதாரண சிலிண்டர்கள் இரும்பினால் ஆனவை, ஆனால் கராச்சி மக்கள் தற்போது பின்பற்றி வரும் நடைமுறை ஒரு சிறிய ஊசி அளவு துளை விழுந்தாலோ அல்லது அருகில் தீப்பொறி பட்டாலோ பலூன் மொத்தமாக வெடித்துச் சிதறும். அதே போல கேஸை உறிஞ்சப் பயன்படுத்தும் பம்பில் சிறிய அளவில் மின் கசிவு (Short circuit) ஏற்பட்டாலும், அது ஒரு பெரிய வெடிகுண்டு போல வெடிக்கும் வாய்ப்பு அதிகம் என்று நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். வாழ்வாதாரம் என்பது முக்கியம் தான், அதற்காக மாற்று வழிகளை யோசிக்காமல் வாழ்வையே ஆபத்தில் ஆழ்த்தும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது பேராபத்து என்கிறார்கள் நிபுணர்கள். பாகிஸ்தானில் மக்கள் செய்யும் இந்த செயல் “தற்கொலைக்குச் சமமானது” என்று பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
