கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 142 தொகுதிகளுக்கு இரண்டாம் மற்றும் கடைசி கட்டமாக இன்று வாக்குப் பதிவு தொடங்கியது. ஏற்கனவே முதற்கட்டமாக ஏப்.23ஆம் தேதி 152 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசின் கோட்டையான 142 தொகுதிகளில் 2வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. இத்துடன் 5 மாநில தேர்தல் முடிவடைந்து, மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த 23ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் 93.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இதைத் தொடர்ந்து மீதமுள்ள 142 தொகுதிகளில் 2வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்க உள்ளது.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் இந்த 142 தொகுதிகளில் 123 தொகுதிகளை திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியது. பாஜ வெறும் 18 இடங்களில் மட்டும் வென்றது. ஐஎஸ்எப் கட்சி ஒரு இடத்தை கைப்பற்றியது. கடந்த தேர்தலிலேயே பாஜவின் வளர்ச்சி வலுவாக இருந்த போதிலும், தெற்கு வங்கப் பகுதியில் திரிணாமுல் காங்கிரசின் அசுர வெற்றி தான் மம்தா பானர்ஜி தொடர்ந்து 3வது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தது.
எனவே இம்முறையும் திரிணாமுல் காங்கிரஸ் 4வது முறையாக ஆட்சியை கைப்பற்ற இன்றைய 2ம் கட்ட தேர்தல் நடக்கும் 142 தொகுதிகள் மிக முக்கியமாக கருதப்படுகிறது. மேற்கு வங்கத்தில் இம்முறை ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் பாஜவுக்கும் 2ம் கட்ட தேர்தல் மிக முக்கியமாக இருப்பதால், திரிணாமுல் காங்கிரசின் கோட்டையை தகர்க்க பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய பாஜ தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்துள்ளனர்.
இதுமட்டுமின்றி, 2ம் கட்ட தேர்தலில் உச்ச கட்ட மோதல் நிலவும் தொகுதியாக மம்தா பானர்ஜியின் பவானிபூர் பெரும் எதிர்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
