கோவை : கோவை மாவட்டத்தில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்கும் வகையில் பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயில் உள்ளிட்ட அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கோயில்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. 98 டிகிரி முதல் 100 டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் குடும்பத்துடன் ஆன்மீக தளத்திற்கு சென்று வருகின்றனர். இப்படி செல்லும் பக்தர்கள் வெயில் காரணமாக கோயில் பிரகாரத்தை சுற்றி வலம் வரும் போது கால்கள் சுடுவதால் சிரமம் அடைகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு பிரசித்தி பெற்ற கோயில் பிரகாரங்களின் நடைபாதைகளில் தேங்காய் நார் விரிப்புகள்,வெப்பத்தை தடுக்கின்ற கூலிங் பெயிண்ட் அடித்தல், அடிக்கடி தண்ணீர் பீச்சி அடிக்கவும் அறநிலையத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர், மருதமலை, கோனியம்மன் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இதில், மருதமலை முருகன் கோயிலில் பிரகாரத்தை சுற்றி பக்தர்கள் வலம் வர தரைவிரிப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. பேரூர் பட்டீஸ்வரர் கோயிலின் பிரகாரத்தை சுற்றி தரையில் கூலிங் பெயிண்ட் பூசப்பட்டுள்ளது. கோனியம்மன் கோயிலில் முதலில் கூலிங் பெயிண்ட் அடித்த போதும், பக்தர்கள் கால்கள் சுடுவதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில் பச்சை நிற மேட் கோயில் பிரகாரத்தில் போடப்பட்டு இருக்கிறது. இது நல்ல பலன் அளித்துள்ள நிலையில், மாநகரில் அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோயில்களிலும் பச்சை நிற மேட் போடப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
இதனால், பக்தர்கள் வெயிலின் சூடு பாதிக்காத வகையில் பிரகாரத்தை வலம் வந்து சாமி தரிசனம் செய்து வருவதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
