×

சென்னையில் மே 1ஆம் தேதி முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணிப்பு

சென்னை: சென்னையில் மே 1ஆம் தேதி முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கண்டித்துள்ளார். மேலும் ‘சென்னையில் மே 5ஆம் தேதிக்கு பிறகு வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும்; தமிழ்நாட்டின் மேற்கு, தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் வரும் நாட்களில் மழை பெய்யவும் வாய்ப்பு’ எனவும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “தற்போது நிலவி வரும் கடுமையான வெப்ப அலைக்கு எல் நினோ (El Nino) இன்னும் ஒரு காரணமாக அமையவில்லை. மாறாக, நீண்ட கால வறண்ட வானிலை, ஏப்ரல் மாதத்தில் போதிய வெப்பச் சலன மழையின்மை மற்றும் மேகங்களற்ற தெளிவான வானம் காரணமாக சூரிய வெப்பம் நேரடியாகத் தாக்குவது போன்ற காரணங்களாலேயே வெப்பம் அதிகரித்துள்ளது.

மேலும், வளிமண்டலத்தில் உயர் அழுத்த மண்டலத்தின் ஆதிக்கம் நிலவுவதாலும், மண்ணில் ஈரப்பதம் குறைந்து குளிர்ச்சி தரும் ஆவியாதல் செயல்முறை பாதிக்கப்பட்டதாலும் வெப்பத்தின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இருப்பினும், வட இந்தியாவில் மே 5-ஆம் தேதி முதல் மே மாதத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரம் வரை வெப்பநிலை இயல்பை விடக் குறைந்து காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், தென்னிந்தியாவின் பல பகுதிகளில் வரும் நாட்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாகத் தமிழ்நாட்டின் மேற்கு மற்றும் உட்புற மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்யக்கூடும்.

வட தமிழகம் மற்றும் சென்னை (KTCC) பகுதிகளில் மே 1 முதல் மே 4 அல்லது 5-ஆம் தேதி வரை வெப்பம் அதன் உச்ச நிலையில் இருக்கும். அதன் பிறகு வெப்பநிலை படிப்படியாகக் குறையத் தொடங்கும். குறிப்பாக, கத்திரி வெயில் தொடங்கிய பிறகு, உச்ச வெப்பநிலையிலிருந்து சுமார் 3°C முதல் 4°C வரை வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.

Tags : Chennai ,Pradeep John ,
× RELATED லாலாப்பேட்டை அருகே குடிநீர் வழங்க...