புளியங்குடி,ஏப்.29: புளியங்குடி அருகே உள்ள உள்ள அய்யாபுரம் கிராமத்தில் நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. புளியங்குடி அருகேயுள்ள திருவேட்டநல்லூர், பாம்புகோவில் சந்தை, அய்யாபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10க்கும் மேற்பட்டோரை வெறி நாய்கள் கடித்து குதறியது. இதையடுத்து தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவின் பேரில் அய்யாபுரம் கிராமத்தில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் வீட்டில் வளர்க்கும் நாய்கள் மற்றும் தெருக்களில் சுற்றி திரியும் நாய்கள் என சுமார் 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டது. மேலும் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நகராட்சி பகுதிகளில் நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சையும் நடைபெற்று வருகிறது. முகாம் ஏற்பாடுகளை சிந்தாமணி கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் சந்திரலேகா, கால்நடை பராமரிப்பு உதவியாளர் பால் முனீஸ்வரன் ஆகியோர் செய்தனர்.
