மார்த்தாண்டம், ஏப். 29: மார்த்தாண்டம் அருகே பூங்கரை பகுதியை சேர்ந்தவர் ஜெயகணேஷ்(35) கொத்தனார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அபிதா என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அபிதாவுக்கு 25 பவுன் நகை, ஜெயகணேஷ் உறவினர்களுக்கு 9 பவுன் நகை, ரூ. 2லட்சம் பணம், வீட்டு உபயோக பொருள்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். பின்னர் மீண்டும் ஜெயகணேஷ் மனைவி அபிதாவிடம் ரூ.10 லட்சம் வேண்டும் என கேட்டதின் பேரில், அபிதாவின் வீட்டில் கேட்டு ரூ. 8.5 லட்சம் பணத்தை வாங்கி கொடுத்துள்ளார். அதில் ஜெயகணேஷ் கார் மற்றும் பைக் வாங்கியுள்ளார். வெளிநாட்டில் ஜெயகணேஷ் வேலை செய்து வருவதால், அபிதாவிடமிருந்து 18 பவுன் நகைகளை ஜெயகணேஷின் சித்தி கிருஷ்ணம்மாள் கேட்டு வாங்கி விற்றுள்ளார்.
மேலும் இருக்கும் நகைகளை கணேஷிடம் சொல்லி அபிதாவிடம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். ஆனால் அபிதா கொடுக்காததால் ஆத்திரமடைந்த கிருஷ்ணம்மாள், ஜெயகணேஷின் தந்தை ஜெபமணி(68), ஜெனிஷ்(27), ஜெனிபா(38) ஆகிய 4 பேரும் சேர்ந்து அபிதாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அபிதா ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து மார்த்தாண்டம் மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் ஜெயகணேஷ், கிருஷ்ணம்மாள், ஜெபமணி, ஜெனிஷ், ஜெனிபா ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
