கொல்கத்தா: தமிழகம் உட்பட 5 மாநில தேர்தலில் மேற்கு வங்கத்தில் மட்டும் 2 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. அங்கு, 152 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் கடந்த 23ம் தேதி நடந்தது. அதில் 93.19 சதவீத வாக்குகள் பதிவாகின. அதைத் தொடர்ந்து, 142 தொகுதிகளுக்கான 2ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் அனல் பறந்தது. பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், உபி, அசாம் மாநில பாஜ முதல்வர்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று முதல்வர் மம்தா பானர்ஜி, தான் போட்டியிடும் பவானிபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ‘‘முதல் கட்டமாக 152 தொகுதிகளில் நடந்த தேர்தலிலேயே நாங்கள் 100 இடங்களைக் கடந்துவிட்டோம். எஞ்சிய 142 தொகுதிகளுக்கான தேர்தலில் நீங்கள் அனைவரும் எங்களுக்கு வாக்களித்தால், நாங்கள் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறுவோம்’’ என்றார். பாஜ பிரித்தாளும் அரசியலில் ஈடுபடுவதாகவும் மேற்கு வங்கத்தை பிரிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். 2ம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடக்க உள்ள பவானிபூரில் மம்தாவை எதிர்த்து பாஜ மாநில தலைவர் சுவேந்து அதிகாரி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
இதே போல, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்தார். அனல் தெறிக்கும் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து, 142 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதில் மொத்தம் 3,21,73,837 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தலையொட்டி மத்திய படைகளின் 2,321 கம்பெனிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ரூ.510 கோடி பறிமுதல்
மேற்கு வங்கத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட மார்ச் 15ம் தேதியில் இருந்து இதுவரை மொத்தம் ரூ.510 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் ரூ.339 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2024 மக்களவை தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட தொகையை விட இம்முறை அதிகமான பணம் கைப்பற்றப்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.
