புதுடெல்லி: ராஜ்யசபாவின் 7 ஆம்ஆத்மி எம்பிக்கள் பாஜக கட்சிக்குத் தாவிய விவகாரத்தில் அக்கட்சி போட்ட 5 பிளானில் ‘தெலுங்கு தேசம் பார்முலா’ கைகொடுத்தாக கூறப்படுகிறது. இருந்தும் ஒன்றிய அரசின் சதி பஞ்சாபில் எடுபடவில்லை என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது. ஆம் ஆத்மி கட்சி கடந்த 2022ம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த சமயத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்தபடியாக ராகவ் சதா (37) மிக முக்கியத் தலைவராக உருவெடுத்தார். இருப்பினும், 2024ம் ஆண்டு அரியானா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெறும் 1.8 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தது. போட்டியிட்ட வேட்பாளர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர். அதனைத் தொடர்ந்து 2025ம் ஆண்டு நடந்த டெல்லி தேர்தலிலும் அக்கட்சி ஆட்சியை இழந்ததால், ராகவ் சதா மற்றும் சந்தீப் போன்ற நிர்வாகிகளின் செல்வாக்கு கட்சிக்குள் குறையத் தொடங்கியது. இந்த சூழலில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவரான ராகவ் சதா, ஆறு மாநிலங்களவை எம்.பி.,க்களுடன் பாஜகவில் இணைவதாக அறிவித்தார்.
பல மாதங்களாக ஒன்றிய பாஜக அரசு திரைமறைவில் நடத்திய ரகசிய திட்டத்தின் பலனாகவே இந்த கட்சித் தாவல் நடந்துள்ளது. மாநிலங்களவையில் ஆம் ஆத்மிக்கு இருந்த மொத்த பலத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களை பிரித்ததன் மூலம், கட்சித் தாவல் தடைச் சட்டத்திலிருந்து தப்பிக்க ‘தெலுங்கு தேசம் மாடலை’ பாஜக கையாண்டுள்ளது. இதன் மூலம் மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியை பலவீனப்படுத்தி, தனது பெரும்பான்மையை நிலைநாட்ட ஒன்றிய பாஜக அரசு எதேச்சதிகாரப் போக்கை கடைபிடித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மிக முக்கியமான தேர்தல் வியூகவாதியான டாக்டர் சந்தீப் குமார் பதக், ஆக்ஸ்போர்டு மற்றும் எம்ஐடி போன்ற உலகப்புகழ் பெற்ற நிறுவனங்களில் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்ட கல்வியாளர் ஆவார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் அமோக வெற்றிக்கு இவரே முக்கியக் காரணமாகக் கருதப்பட்டார். அதன் அங்கீகாரமாக 2022 முதல் பஞ்சாப் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை எம்.பி. ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆம் ஆத்மியின் தேசிய பொதுச் செயலாளராகப் பணியாற்றிய இவர் தான், ஆம் ஆத்மியை உடைத்ததற்கு மூளையாகச் செயல்பட்டுள்ளார்.
குஜராத் மற்றும் அரியானா தேர்தல்களில் ஆம் ஆத்மி மண்ணைக் கவ்வியதால், கெஜ்ரிவால் அவரை ஓரங்கட்டத் தொடங்கினார். அதிகாரம் பறிக்கப்பட்ட கடுப்பில் இருந்த சந்தீப் குமார், ராகவ் சதாவுடன் கைகோர்த்து பாஜக முகாமுக்குத் தாவியுள்ளார். இந்நிலையில் பாஜக நீண்ட நாட்களாக காத்திருந்து பல பார்முலா மாடல்கள் தோல்வியில் முடிந்ததால், தெலுங்கு தேசம் மாடலை பின்பற்றி 7 ஆம்ஆத்மி எம்பிக்ளை வளைத்து போட்டுள்ளது.
தற்போது 7 எம்பிக்கள் பாஜகவுக்கு தாவியுள்ளதால், அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆம்ஆத்மியின் பிளவுக்கு முக்கிய காரணமாக இருந்த ராகவ் சதாவுக்கு ஒன்றிய அமைச்சரவையில் இடம் அல்லது பாஜகவில் முக்கியப் பொறுப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. சமூக வலைதளங்களில் செல்வாக்கு மிக்க ராகவ் சதா மூலம், இளைஞர்களை கவர முடியும்.
மொத்தத்தில், கெஜ்ரிவாலின் வலது கரமாக இருந்த ராகவ் சதா, இப்போது ஆம் ஆத்மிக்கு ‘ஆப்பு’ வைத்துவிட்டு தாமரை மலரத் துணை நின்றிருக்கிறார் என்ற கருத்து மேலோங்கி உள்ளது. மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒன்றிய பாஜக அரசு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தாலும், பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான அரசு தற்போது வரை ஸ்திரமாக உள்ளது. அங்குள்ள 117 எம்எல்ஏ-க்களில் 92 பேர் ஆம் ஆத்மி வசமுள்ள நிலையில், ஆட்சியை கவிழ்க்க சுமார் 38 எம்எல்ஏ-க்களை இழுக்க வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு உள்ளது. எம்எல்ஏ-க்கள் அனைவரும் முதல்வர் பகவந்த் மானுக்கு ஆதரவாக உள்ளதால், ஒன்றிய அரசின் சதி பஞ்சாபில் எடுபடவில்லை. துரோகம் செய்த எம்பி-க்களை ‘துரோகிகள்’ என்று பகவந்த் மான் சாடியுள்ளார். மாநிலங்களவையில் எம்பி-க்களை விலைக்கு வாங்கியதன் மூலம் ஆத்மியின் தேசிய அந்தஸ்தை சிதைக்க ஒன்றிய பாஜக அரசு முயன்றாலும், பஞ்சாப் மக்களின் தீர்ப்பை அவ்வளவு எளிதில் குலைக்க முடியாது என்பது உறுதியாகி
யுள்ளது.

