×

மகாராஷ்டிரா அரசியலில் பிளவு ஏற்பட வாய்ப்பு; உத்தவ் அணியின் 3 எம்பிக்கள் திடீர் மாயம்: பாஜகவின் ‘ஆபரேஷன் டைகர்’ திட்டம் அம்பலம்

 

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைக்க ஒன்றிய பாஜக அரசு மீண்டும் சதி செய்து வருகிறது.
மகாராஷ்டிராவில் கடந்த 2022ம் ஆண்டு ஏக்நாத் ஷிண்டே (தற்போதைய துணை முதல்வர்) நடத்திய கலகத்தால் சிவசேனா கட்சி உடைந்து, உத்தவ் தாக்கரேவின் ஆட்சி பறிபோனது. அந்த கசப்பான சம்பவத்தின் சுவடுகள் மறையும் முன்னே, தற்போது உத்தவ் பிரிவில் உள்ள 3 எம்பிக்களை வளைக்க ஒன்றிய பாஜக அரசு திரைமறைவு வேலைகளைத் தொடங்கியுள்ளது. மராத்வாடா பிராந்தியத்தின் முக்கிய முகமும், மூன்று முறை எம்பியாகவும் இருக்கும் சஞ்சய் ஜாதவ், கடந்த சில நாட்களாக கட்சித் தலைமை நடத்திய முக்கிய ஆலோசனைக் கூட்டங்களைப் புறக்கணித்துள்ளார். மும்பையிலுள்ள ‘மாதோ’ இல்லத்தில் நடந்த கூட்டத்திற்கும் அவர் வராதது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரைத் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், அவர் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளதாக கட்சி நிர்வாகிகள் சமாளித்து வருகின்றனர். இருப்பினும், அவர் டெல்லியில் பாஜக முக்கியத் தலைவர்களுடன் ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய நிலவரப்படி, சஞ்சய் ஜாதவ் மட்டுமின்றி இங்கோலி எம்பி நாகேஷ் பாட்டீல் அஷ்டிகர் மற்றும் யவத்மால் எம்பி சஞ்சய் தேஷ்முக் ஆகியோரும் பாஜக பக்கம் சாய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் சமீபத்தில் டெல்லியில் ஒன்றிய அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் அளித்த விருந்தில் பங்கேற்றுள்ளனர். மேலும் சஞ்சய் ஜாதவ், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இது உத்தவ் தாக்கரேவின் படையைச் சீர்குலைக்க பாஜக விரித்துள்ள சதி வலை என அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை அதிகார பலத்தால் மிரட்டி இழுக்கும் ‘ஆபரேஷன் டைகர்’ என்ற கீழ்த்தரமான அரசியலை ஒன்றிய அரசு மீண்டும் கையில் எடுத்துள்ளது. தலைமைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைப் பயன்படுத்தி, ஜனநாயக விரோத முறையில் கட்சியைத் துண்டு போட பாஜக துடிக்கிறது என்று எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

 

Tags : Maharashtra ,Uddhav ,BJP ,Mumbai ,BJP government ,Shiv Sena party ,Eknath Shinde ,Deputy Chief Minister ,Uddhav Thackeray ,
× RELATED கோடை வெயில் தாக்கத்தால் பட்டாசு...