×

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கான இலவச கல்வி திட்டத்தில் இளங்கலை படிப்புகளில் சேர மே 23க்குள் விண்ணப்பிக்கலாம்: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: இலவச கல்வித் திட்டத்தில் ஏழை மாணவர்கள் இளங்கலை படிப்புகளில் சேர மே 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரீட்டா ஜான் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஏழை மாணவர்களுக்காக சென்னைப் பல்கலைக்கழகம் இலவச கல்வித் திட்டம் என்ற சிறப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்தவகையில், வரும் கல்வி ஆண்டில் (2026-27) இந்த இலவச கல்வித் திட்டத்தின் கீழ் சென்னை பல்கலைக்கழக இணைப்பு அங்கீகாரம் பெற்ற அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் இளங்கலைப் படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் 2025-26ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், தாய், தந்தையை இழந்த மாணவர்கள், குடும்பத்தில் பட்டப்படிப்புக்கு செல்லும் முதல் தலைமுறை மாணவர்கள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் முழு விவரங்கள் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ்களின் விவரங்கள் பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் (www.unom.ac.in) கொடுக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் (மே 23) விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்துச் சான்றிதழ்களுடன் முறையாகப் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Madras University ,Chennai ,Rita John ,Madras University… ,
× RELATED விளைச்சல் இருந்தும் விற்பனைக்கு...